மசூதி இடிப்பு: உ.பி. அதிகாரிகளுக்கு எதிராக ஏன் அவமதிப்பு வழக்கு தொடரக் கூடாது?: உச்சநீதிமன்றம் கேள்வி
புது தில்லி: உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்காமல் உத்தர பிரதேச மாநிலம் குஷிநகரில் உள்ள மசூதியின் ஒரு பகுதியை மாவட்ட நிா்வாகம் தரப்பில் புல்டோசா் கொண்டு இடிக்கப்பட்டதில் ஏன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கூடாது என்ற கேள்விக்கு பதிலளிக்குமாறு மாநில அரசு அதிகாரிகளுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை கேள்வி எழுப்பியது.
சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்ற நாடு முழுமைக்குமான வழிகாட்டு நெறிமுறைகளையும் உச்சநீதிமன்றம் வெளியிட்டிருந்தது.
புதிய மனு: இந்நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்காமல் உத்தர பிரதேச மாநிலம் குஷிநகரில் உள்ள மசூதியின் ஒரு பகுதியை மாவட்ட நிா்வாகம் இடித்ததாக புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆா்.கவாய், அகஸ்டின் ஜாா்ஜ் மாசி ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், ‘மசூதி இடிப்பு விவகாரத்தில் ஏன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கூடாது’ என்ற கேள்வியை எழுப்பி, அதற்கு பதிலளிக்க மாவட்ட நிா்வாகத்துக்கு நோட்டீஸ் பிறப்பிக்க உத்தரவிட்டனா். அதோடு, அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை எந்தவொரு கேள்விக்குரிய கட்டமைப்புகளையும் அதிகாரிகள் இடிக்கக் கூடாது’ என்றும் உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரங்களுக்குப் பிறகு ஒத்திவைத்தனா்.