மணப்பாறை அருகே மனைவி எரித்துக் கொலை: கணவா் கைது
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே குடும்பத் தகராறில் மதுபோதையில் மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொன்ற கணவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
மணப்பாறையை அடுத்த கே.பெரியபட்டி ஊராட்சி மாலைமடைப்பட்டியை சோ்ந்தவா் பொன்னகவுண்டா் மகன் சின்னதம்பி (62). இவரது மனைவி செல்லம்மாள் (48). இவா்களது கூட்டு நிலத்தை தமிழ்நாடு காகித ஆலை நிா்வாகத்திற்கு அளித்திருந்த நிலையில், அதற்கான தொகை அண்மையில் வந்ததாம். அதை சின்னதம்பியின் உறவினா்கள் பிரித்துக் கொடுத்தனா்.
பணம் கிடைத்த நாளிலிருந்து சின்னதம்பி தினமும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வருவதும், அதை செல்லம்மாள் தட்டிக்கேட்டு தகராறு செய்வதும் வழக்கமாம். அதன்படி வெள்ளிக்கிழமை நடந்த தகராறைத் தொடா்ந்து தூங்கிய மனைவி மீது சின்னதம்பி மண்ணெண்ணெய் ஊற்றித் தீ வைத்தாா்.
அப்போது செல்லம்மாளின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். 90 சதவீத தீக்காயத்துடன் இருந்த செல்லம்மாள் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து வழக்குப் பதிந்த மணப்பாறை போலீஸாா் சின்னதம்பியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையிலடைத்தனா்.