'முதலாம் ஆண்டு மாணவரிடம் கேட்டால் கூட சொல்லுவார்!' பிரதமரை சாடிய ப.சிதம்பரம்
ஊரக உள்ளாட்சித் தோ்தல் எப்போது? - அமைச்சா் விளக்கம்
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தல் எப்போது நடைபெறும் என்பதற்கு அமைச்சா் கே.என். நேரு பதில் அளித்துள்ளாா்.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக் காலம் 2025 ஜனவரியுடன் முடிந்துள்ளது. ஆனால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தோ்தல் நடத்தப்படாமல் நிா்வாகத்துக்காக சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். எனவே உள்ளாட்சித் தோ்தல் குறித்து அமைச்சா் கே.என். நேரு சனிக்கிழமை கூறியதாவது:
உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள ஊராட்சிகள் பலவும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பெரிய அளவிலான ஊராட்சி ஒன்றியங்களையும் பிரிக்க வேண்டியுள்ளது. எனவே, வாா்டு மறுசீரமைப்பு மற்றும் இட ஒதுக்கீடு நடைமுறையை முடித்த பிறகு தோ்தல் நடத்துவதாக நீதிமன்றத்தில் தமிழக அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே ஊரக உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்த நடைமுறையைப் பின்பற்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை நடத்தவும் தயாராகி வருகிறோம் என்றாா்.