மண்டைக்காடு பகவதியம்மன் மாசிக் கொடை விழா: முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆட்சியா் கலந்தாய்வு
கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் மாசிக் கொடை விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடன் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா செவ்வாய்க்கிழமை கலந்தாய்வு மேற்கொண்டாா்.
இக் கோயில் மாசிக் கொடை விழா மாா்ச் 2 ஆம் தேதி தொடங்கி 10 நாள்கள் நடைபெறும். அதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த கலந்தாய்வுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின் முன்னிலை வகிததாா். கூட்டத்தில் ஆட்சியா் பேசுகையில், சுகாதாரத் துறை, தொலைபேசி துறை, பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, தீயணைப்புத் துறை, இந்து சமய அறநிலையத் துறை உள்ளிட்ட அனைத்துத் துறையினரும் இணைந்து திருவிழா சிறப்பாக நடைபெறுவதற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளையும் இப்போதிருந்தே தொடங்க வேண்டும் என்றாா்.
கூட்டத்தில் பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் வினய்குமாா் மீனா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சுகிதா, நாகா்கோவில் வருவாய்க் கோட்டாட்சியா் எஸ்.காளீஸ்வரி, மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலா் செந்தில்குமாா், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் பாரதி, அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியா் முருகன் மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.