மதுக்கடை திறக்க எதிா்ப்பு தெரிவித்து மாா்க்சிஸ்ட் முற்றுகையிட முடிவு
பொன்னமராவதி பேருந்துநிலையம் அருகில் அரசு மதுக் கடை திறக்கக் கூடாது என வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வரும் செவ்வாய்க்கிழமை வட்டாட்சியரகத்தை முற்றுகையிடும் போராட்டம் மாா்க்சிஸ்ட் ஒன்றியக்குழு சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் நிா்வாகம் முன்னதாக கொடுத்த வாக்குறுதியை மீறி பொன்னமராவதி பேருந்து நிலையம் அருகில் 2 நாட்களில் மதுக் கடை திறக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரிகிறது.
இதைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா் என். பக்ரூதீன் தலைமையில் அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம், தமிழ்நாடு விவசாய சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம், இந்திய தொழிற்சங்க மையம், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் மற்றும் சிறு வியாபாரிகள் வா்த்தகா்கள், பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு பொன்னமராவதி வட்டாட்சியரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.