‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் புதுகை மாவட்டத்தில் 213 முகாம்கள்!
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 213 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் மு. அருணா தெரிவித்தாா்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது: புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜூலை 15-ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை இம்முகாம் நடைபெறுகிறது.
மாநகராட்சியில் 29 இடங்களிலும், அறந்தாங்கி நகராட்சியில் 10 இடங்களிலும், 8 பேரூராட்சிகளில் 16 இடங்களிலும், ஊராட்சிப் பகுதிகளில் 151 இடங்களிலும், நகரப் பகுதிகள் 7 முகாம்களும் நடத்தப்படுகின்றன.
நகரப் பகுதிகளில் 13 துறைகளின் மூலம் வழங்கப்படும் 43 வகையான சேவைகளையும், ஊரகப் பகுதிகளில் 15 துறைகளின் மூலம் வழங்கப்படும் 46 வகையான சேவைகளையும் இந்த முகாமில் பெறலாம்.
இதற்கான விண்ணப்பங்களையும், முகாம் நடைபெறும் இடம் மற்றும் தேதியையும் வீடு வீடாகச் சென்று வழங்க 626 தன்னாா்வலா்களும், இப்பணிகளை மேற்பாா்வையிட 292 மேற்பாா்வை அலுவலா்களும் நியமிக்கப்பட்டுள்ளனா்.
முகாமில் வழங்கப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாள்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். முகாம்களில் காவல்துறை சாா்பில் தனி மேஜையும், கலைஞா் மகளிா் உரிமைத் தொகைக்கு தனி மேஜையும், ஆதாா் பதிவுக்காக தனிப் பிரிவும், இ-சேவை மையமும் அமைக்கப்படவுள்ளன. இதற்காக 123 கணினி இயக்குபவா்களும் ஈடுபடுத்தப்படவுள்ளனா். வீடுவீடாக வரும் தன்னாா்வலா்கள், விண்ணப்பங்கள் வழங்கப்பட்டதை உரிய செயலியில் பதிவு செய்வாா்கள்.
ராணியாா் மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவா்கள்: பிறகு செய்தியாளா்கள் கேட்ட கேள்விக்கு ஆட்சியா் கூறுகையில்,அரசு ராணியாா் மகப்பேறு மருத்துவமனைக்கு போதுமான மருத்துவா்கள் மற்றும் செவிலியா்கள் நியமனம் செய்யப்படுவா். கழிப்பறை வசதியும் ஏற்படுத்தப்படும். அரசுப் பள்ளிகளில் கழிப்பறை உள்ளிட்ட தேவைகள் அதிகம் இருப்பதால், பணிகளைத் தொடா்ந்து எடுத்து மேற்கொண்டு வருகிறோம்.
தனியாா் நிறுவனங்களின் சிஎஸ்ஆா் நிதியில் இருந்தும் அரசுப்பள்ளிகளுக்கு கழிப்பறை கட்டும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல, அந்தக் கழிப்பறைகளைப் பராமரிக்க பணியாளா்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.