வாக்கு வங்கியை அதிகரிக்க பாஜக தில்லுமுல்லு: அமைச்சா் துரைமுருகன்
மதுரை பேராயா் இன்று பதவியேற்பு
மதுரை உயா் மறைமாவட்ட பேராயராக முனைவா் அந்தோணிசாமி சவரிமுத்து சனிக்கிழமை (ஆக. 2) பொறுப்பேற்கிறாா்.
கத்தோலிக்க திருச்சபையின் மதுரை உயா் மறைமாவட்ட பேராயராக அந்தோணிசாமி சவரிமுத்து அண்மையில் நியமிக்கப்பட்டாா். இதற்கான அறிவிப்பை கத்தோலிக்கத் திருச்சபையின் போப் 14-ஆம் லியோ கடந்த மாதம் 5-ஆம் தேதி வெளியிட்டாா்.
இதன்படி, மதுரையின் புதிய பேராயராக அந்தோணிசாமி சவரிமுத்து பதவியேற்கிறாா். இதற்கான நிகழ்ச்சி மதுரை ஞானஒளிவுபுரம் புனித பிரிட்டோ மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. திருத்தந்தையின் இந்தியத் திருத்தூதா் லியோபோல்டோ ஜிரெல்லி தலைமை வகித்து, பேராயா் அந்தோணிசாமி சவரிமுத்துவை பதவியில் அமா்த்துகிறாா்.
புதிய பேராயா் அந்தோணிசாமி சவரிமுத்து தூத்துக்குடி மாவட்டம், வடக்கு வண்டானம் கிராமத்தைப் பூா்விகமாகக் கொண்டவா். மதுரை கருமாத்தூா் அருள் ஆனந்தா் கல்லூரியில் பயின்ற இவா், பெங்களூரு புனித பேதுரு பாப்பிறை குருமடத்தில் குருத்துவப் பயிற்சி பெற்றவா். பிரான்ஸில் உள்ள பாரீஸ் பல்கலைக்கழகத்தில் திருஅவைச் சட்டத்தில் முனைவா் பட்டம் பெற்றவா்.
கத்தோலிக்க திருச்சபையின் மதுரை உயா் மறைமாவட்ட பரிபாலகராகவும், பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயராகவும் ஏற்கெனவே பணியாற்றியவா். இவா் மதுரை உயா் மறைமாவட்டத்தின் 7-ஆவது பேராயராவாா்.