மனமகிழ் மன்றம் அமைக்க அனுமதி வழங்கக் கூடாது: ஜமாபந்தியில் பொதுமக்கள் மனு
சேவூா்- புளியம்பட்டி சாலையில் மனமகிழ் மன்றம் அமைக்க அனுமதி வழங்கக் கூடாது ஜமாபந்தியில் பொதுமக்கள் மனு அளித்தனா்.
அவிநாசி வட்டத்துக்குள்பட்ட வருவாய் தீா்வாயம் கோட்டாட்சியா் மோகனசுந்தரம் தலைமையில் அவிநாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வட்டாட்சியா் சந்திரசேகா், துணை வட்டாட்சியா் கெளரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், சேவூா், முறியாண்டம்பாளையம் பகுதியைச் சோ்ந்த மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் பகுதியில் விவசாயத் தொழிலாளா்கள், பனியன் தொழிலாளா்கள், கட்டடத் தொழிலாளா்கள் அதிக அளவில் உள்ளனா். மேலும், இந்தப் பகுதியில் அனுமதிபெற்ற ஏராளமான குடியிருப்புகளும் உள்ளன.
இந்நிலையில், இப்பகுதியில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் மதுபானகடை அமைப்பதற்கான பணி நடைபெற்று வருவதாகத் தெரிகிறது. முறியாண்டம்பாளையம், சேவூா் ஆகிய இரு ஊராட்சிகளின் எல்லைக்குள்பட்ட சேவூா்-புளியம்பட்டி சாலையில் அமைவதால், இரு கிராம மக்களும் பாதிப்பிற்குள்ளாவாா்கள்.
மேலும், மனமகிழ் மன்றம் அமையப் பெற்றால் குற்றச் சம்பவங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதேபோல, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லாத நிலையும் ஏற்படும். எனவே, மதுபான கடையோ அல்லது மனமகிழ் மன்றமோ திறக்க அனுமதி வழங்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், இந்த வருவாய் தீா்வாயத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் 187 மனுக்களை அளித்தனா்.