"மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியை 'பிச்சைக்காரன்' என்று இழிவுபடுத்துவதா"...
`மனித ஆசைகளின் எல்லையை ஆராய்ந்தவர்' - பத்ம பூஷன் எஸ்.எல். பைரப்பா காலமானார்
கன்னட இலக்கியத்தின் உச்சம் தொட்ட எழுத்தாளர் சாந்தேசிவர லிங்கண்ணையா பைரப்பா. பத்ம பூஷன் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்ற இவர், நேற்று பெங்களூரில் தன் 94- வது வயதில் காலமானார்.
ஆகஸ்ட் 20, 1931-ல் ஹாசன் மாவட்டத்தின் சாந்தேசிவர கிராமத்தில் பிறந்த எஸ்.எல். பைரப்பா, பிளேக் நோயின் கொடுமையால் இளம் வயதிலேயே தன் தாயாரையும், உடன் பிறந்தவர்களையும் இழந்தார்.
அதனால், மும்பையில் ரயில்வே போர்ட்டராகப் பணியாற்றினார். இதற்கிடையில், பரோடா மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் முதுகலை மற்றும் முனைவர் பட்டம் பெற்றார்.
ஸ்ரீ கடசித்தேஷ்வர் கல்லூரி, சர்தார் படேல் பல்கலைக்கழகம் மற்றும் என்சிஇஆர்டி போன்ற நிறுவனங்களில் தர்க்கம் மற்றும் உளவியலில் விரிவுரையாளராக இருந்தார்.
1991- ல் ஓய்வு பெற்ற இவர், தொடர்ந்து இலக்கியம் சார்ந்து இயங்கிவந்தார். 1958-ம் ஆண்டு இலக்கிய உலகில் அறிமுகமான இவர், கடந்த 60 ஆண்டுகளில் 25 நாவல்களை எழுதியுள்ளார்.
சாகித்ய அகாடமி பெல்லோஷிப், பத்மஸ்ரீ, பத்ம பூஷன், பம்பா விருது, சரஸ்வதி சம்மான் போன்ற விருதுகள் பெற்றிருக்கிறார்.
இவரின் படைப்புகளின் மூலம், மனித ஆசை, தர்மம், வரலாற்று நினைவு மற்றும் சமூக மாற்றங்களை ஆராய்ந்தார்.
தனது தத்துவ, வரலாற்று மற்றும் சமூக ரீதியாக எதிரொலிக்கும் நாவல்களால் கன்னட புனைகதையின் வரையறைகளை மறுவடிவமைத்து, ஒரு ஆழமான மரபை உருவாக்கியிருக்கிறார்.
இவரின் மறைவு எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், அரசியல் தலைவர்களை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
எழுத்தாளர் சாந்தேசிவர லிங்கண்ணையா பைரப்பாவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்திருக்கிறார்.
அவரின் பதிவில், ``எஸ்.எல். பைரப்பா மறைவால், மனசாட்சியைத் தூண்டி, இந்தியாவின் ஆன்மாவை ஆழமாக ஆராய்ந்த ஓர் உயர்ந்த தலைவரை நாம் இழந்துவிட்டோம்.
அச்சமற்ற மற்றும் காலத்தால் அழியாத சிந்தனையாளரான அவர், தனது சிந்தனையைத் தூண்டும் படைப்புகளால் கன்னட இலக்கியத்தை ஆழமாக வளப்படுத்தியிருக்கிறார்.
அவரது எழுத்துக்கள் தலைமுறைகளை சமூகத்தைப் பிரதிபலிக்கவும், கேள்வி கேட்கவும், அதில் ஆழமாக ஈடுபடவும் தூண்டியிருக்கிறது.
நமது வரலாறு மற்றும் கலாசாரத்தின் மீதான அவரது அசைக்க முடியாத ஆர்வம் வரும் ஆண்டுகளிலும் தொடர்ந்து ஊக்குவிக்கும்.
இந்த சோகமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவரின் குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுடன் உள்ளன. ஓம் சாந்தி." எனப் பதிவிட்டிருக்கிறார்.
கர்நாடக முதல்வர் சித்தராமையா, "கன்னட இலக்கியத்தை உலக அரங்கிற்குக் கொண்டு வந்த படைப்புகளைக் கொடுத்த அறிவுசார் ஜாம்பவானை இழந்துவிட்டோம்" எனப் பதிவிட்டு இரங்கல் தெரிவித்திருக்கிறார்.