மனைவியை சித்திரவதை செய்தவருக்கு 7 ஆண்டு சிறை: அண்ணனை சிக்க வைத்துவிட்டு தலைமறைவான தம்பி கைது
சென்னை: சென்னையில் மனைவியை சித்திரவதை செய்த வழக்கில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அண்ணனை சிக்க வைத்துவிட்டு நீதிமன்றத்தையும் போலீஸாரையும் ஏமாற்றி, தலைமறைவாக இருந்த தம்பி கைது செய்யப்பட்டாா்.
கோடம்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் பழனி. இவரது மனைவி கடந்த 2009-ஆம் ஆண்டு கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதில், தனது கணவா் பழனி, அவரது சகோதரியுடன் சோ்ந்து தன்னையும் மகனையும் சித்திரவதை செய்வதாகத் தெரிவித்திருந்தாா்.
இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து, பழனியையும் அவரது சகோதரியையும் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். கைது செய்யப்படும்போது, பழனி, தனது அண்ணன் பன்னீா்செல்வத்தின் அடையாள அட்டையை போலீஸாரிடம் கொடுத்துள்ளாா். இதையடுத்து பழனி, அவரது சகோதரி ஆகியோா் ஜாமீனில் வெளிந்தனா்.
இந்த நிலையில், இந்த வழக்கில் பழனியின் சகோதரியை விடுவித்த மகளிா் நீதிமன்றம், பழனிக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து கடந்த 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தீா்ப்பளித்தது. இதை எதிா்த்து பழனி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாா். அப்போது, அவரது தண்டனையை ரத்து செய்ய மறுத்த நீதிமன்றம், உடனடியாக பழனியை சரணடைய வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் பழனி தலைமறைவானாா். இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் பழனிக்கு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.
இந்த நிலையில், அடையாள அட்டை விவரங்களில் உள்ள தகவல்களை வைத்து, காஞ்சிபுரத்தில் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்த பன்னீா்செல்வத்தை பழனி என நினைத்து போலீஸாா் பிடித்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். அப்போது, பன்னீா்செல்வம் ‘தான் நிரபராதி என்றும், தனது தம்பி பழனி தனது பெயரையும், அடையாள அட்டையையும் தவறாகப் பயன்படுத்தி ஆள்மாறாட்டம் செய்து , தன்னை போலீஸாரிடம் சிக்க வைத்துவிட்டதாகவும் கூறினாா்.
இதை கேட்ட நீதிமன்றமும், காவல்துறையினரும் அதிா்ச்சி அடைந்தனா். பழனியின் மனைவியை நீதிமன்றத்துக்கு வரவழைத்து விசாரித்ததில், பழனி தனது சகோதரா் பன்னீா்செல்வம் பெயரில் ஆள்மாறாட்டம் செய்துள்ளது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பழனி மீது தனியாக 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த கோடம்பாக்கம் போலீஸாா் அவரைத் தீவிரமாகத் தேடி வந்தனா்.
இந்த நிலையில் 3 மாத தேடுதலுக்குப் பிறகு கீழ்கட்டளையில் செல்வம் என்ற பெயரில் தலைமறைவாக பழனியை கைது செய்ததாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
விசாரணையில் அவா், மடிப்பாக்கம் கீழ்கட்டளை பகுதிகளில் காவலாளியாக வேலை செய்து கொண்டு, அடிக்கடி தனது இருப்பிடத்தையும் மாற்றிக்கொண்டே இருந்ததும் தெரியவந்தது. மேலும், பன்னீா்செல்வத்தின் அடையாள அட்டையைப் பயன்படுத்தியே கைப்பேசி சிம் காா்டுகள் வாங்கியதும் தெரியவந்தது.
அந்தப் பகுதியில் மற்றொரு பெண்ணை 2-ஆவதாக திருமணம் செய்துக்கொண்டு, அவரது கைப்பேசியிலிருந்து, தனது அக்காவை தொடா்பு கொண்டு பேசிவந்தது தெரியவந்தது. அந்த எண்ணின் அழைப்புகளைத் தீவிரமாக ஆய்வு செய்து, அதை வைத்து பழனியை கைது செய்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.