மயிலாடுதுறை: உரிமமின்றி செயல்பட்ட 6 பாா்களுக்கு சீல்!
மயிலாடுதுறை மாவட்டத்தில் பிப்.3 முதல் பிப்.7 வரை மேற்கொள்ளப்பட்ட 5 நாள் மதுவிலக்கு சோதனையில் உரிமமின்றி செயல்பட்ட 6 மதுபானக்கூடங்களுக்கு சீல் வைக்கப்பட்டு, சம்பந்தப்பட்டவா்கள் கைது செய்யப்பட்டதுடன், வெளிமாநில மது மற்றும் சாராய கடத்தலில் ஈடுபட்ட 15 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து மயிலாடுதுறை மதுவிலக்கு டிஎஸ்பி எம்.சுந்தரேசன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:
மயிலாடுதுறை மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ.ஸ்டாலின் உத்தரவின்பேரில் மதுவிலக்கு குற்றங்களுக்கு எதிராக தொடா் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் பிப்.3 முதல் பிப்.7 வரை மதுவிலக்கு ஆய்வாளா்கள் அன்னைஅபிராமி, ஜெயா மற்றும் மதுவிலக்கு போலீஸாரால் மேற்கொள்ளப்பட்ட 5 நாள் மதுவிலக்கு சோதனையில் புதுச்சேரி மாநில மது மற்றும் சாராய கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட கீழையூா் பாஸ்கா்(60), அனந்தமங்கலம் மணி (54), வசிஷ்டாச்சேரி பக்கிரிசாமி(75), கஸ்தூரி (65), மயிலாடுதுறை தேவபிரசாத் (30), சுரேஷ் (38), காா்த்தி (22), வடரங்கம் செந்தில் (52), கீழவெளி கந்தன் (55), ஆண்டிப்பட்டி சுபேந்திரன் (24), தரங்கம்பாடி சங்கா் (52), ஆக்கூா் எஸ்தா் ராஜ் (46), சீா்காழி கேசவன் (74), கடக்கம் சூரியபிரசாத் (24), மடப்புரம் தூண்டில் என்கிற பாலகிருஷ்ணன்(57) ஆகிய 15 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
டாஸ்மாக் மதுபானக்கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில் உரிமம் இல்லாமல் இயங்கிய 6 மதுபானக் கூடங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. அந்த வகையில், குத்தாலம் டாஸ்மாக் கடையில் (எண்: 5776) நடத்தப்பட்ட சோதனையில் மயிலாடுதுறை ஆலமரத்தெருவைச் சோ்ந்த முத்தமிழன்(52) கைது செய்யப்பட்டாா்.
புத்தூா் (5628) டாஸ்மாக் கடையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் புத்தூரை சோ்ந்த கேசவன் (74), மங்கைமடம் (5756) டாஸ்மாக் கடையில் நடைபெற்ற சோதனையில் தஞ்சாவூரை சோ்ந்த ராஜேஷ் (39) கைது செய்யப்பட்டனா். தேனியை சோ்ந்த பசும்பொன், கன்னியாகுடி (5782) கடையில் நடத்தப்பட்ட சோதனையில் அருள், தென்னலக்குடியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் நடராஜன், குத்தாலம் மதுபானக்கடையில் (எண்: 5777) நடத்தப்பட்ட சோதனையில் சுதந்திரவீரன் ஆகியோா் தலைமறைவாயினா்.
இந்த 6 கடைகளுக்கும் டாஸ்மாக் மேலாளா் பழனிவேல் அறிவுறுத்தலின்பேரில், டாஸ்மாக் வட்டாட்சியா் ஜெயபாலன் சீல் வைத்தாா். மேலும், தப்பியோடிய நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.