யூகோ வங்கி முன்னாள் தலைவருக்கு எதிராக துணை குற்றப் பத்திரிகை: ரூ.106 கோடி சொத்து...
மரபணு திருத்தப்பட்ட நெல் ரகங்களுக்கு எதிராக தில்லியில் தமிழக விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
நமது நிருபர்
மத்திய அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்திய மரபணு திருத்தப்பட்ட நெல் ரகங்களை உடனடியாகத் திரும்பப் பெறக் கோரியும், வனவிலங்குகளால் பாதிக்கப்பட்ட உயிர்களுக்கும், பயிர்களுக்கும் இழப்பீடு வழங்க தேசிய அளவில் உரிய சட்டத்தை இயற்றக் கோரியும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் புதன்கிழமை தில்லியில் நடைபெற்றது.
தில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் நிறுவனரும் வழக்குரைஞருமான ஈசன் முருகசாமி தலைமை தாங்கி பேசுகையில், "இந்தியாவில் 5,000-க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்கள் உள்ளன. அவை மட்டுமே வறட்சியையும் காலநிலை மாற்றத்தையும் தாங்கி வளரக்கூடியவை. மனித உடலுக்கு தேவையான பல்வேறு சத்துகளைக் கொண்டதுடன் பல்லுயிர் பெருக்கத்துக்கும் உகந்தவை. ஆனால், இந்த அம்சங்களைக் கவனத்தில் கொள்ளாமல் மரபணு திருத்தப்பட்ட 2 நெல் ரகங்களை சமீபத்தில் மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.இதன் காரணமாக விவசாயிகள் அதிக விலை கொடுத்து விதை நெல்லை வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் 2019 முதல் 2023-ஆம் ஆண்டு வரை வனவிலங்குகள் தாக்கியதில் 2,853 பேர் இறந்துள்ளனர். மேலும், ஆண்டுக்கு ரூ10,000 கோடிக்கு மேல் விவசாயப் பயிர்களை வனவிலங்குகள் சேதப்படுத்துகின்றன.
வனப்பகுதிக்கு அருகில் வாழக்கூடிய சிறு விவசாயிகள், தோட்டத் தொழிலாளர்கள், பழங்குடி மக்கள் ஆகியோர் வனவிலங்குகளால் தாக்கப்படுகின்றன. இதனால், உயிரிழப்புகள் ஏற்படுகின்றன' என்றார் அவர்.