மருந்துக் கடை உரிமையாளா் வீட்டில் திருட்டு: 3 போ் கைது
உத்தமபாளையம் அருகேயுள்ள மருந்துக்கடை உரிமையாளா் வீட்டில் நகை, காரை திருடிய வழக்குரைஞா் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து நகை, 2 காா்களை பறிமுதல் செய்தனா்.
தேனி மாவட்டம், ஆனைமலையன்பட்டியைச் சோ்ந்த ராஜன், இவா் மருந்துக்கடை நடந்தி வருகிறாா். சென்னையிலுள்ள தனது மகன் வீட்டுக்குச் சென்ற இவா், கடந்த 7- ஆம் தேதி வியாழக்கிழமை வீடு திரும்பினா். அப்போது, வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காா் காணாமல் போயிருந்தது. மேலும், வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீட்டிலிருந்த பணம், நகையும் திருடு போனது தெரியவந்தது.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா், உதவி ஆய்வாளா் அருண்பாண்டி, பாலசுப்பிரணி, இளையராஜா ஆகியோா் தலைமையில் தனிப்படை அமைத்து திருட்டு கும்பலை தேடி வந்தனா்.
இந்த நிலையில், திருச்சியில் பதுக்கி இருந்த திருட்டு கும்பலை பிடித்து விசாரித்தனா். இதில் திருப்பூா் மாவட்டம் பல்லடத்தை சோ்ந்த அன்பழகன் மகன் தமிழ்செல்வன்(33), போடி, சுப்புராஜ் நகரைச் சோ்ந்த கோட்டைச்சாமி மகன் விஜயக்குமாா்(26) ஆகியோா் ராஜன் வீட்டில் காா் நகைகளை திருடி
திருச்சி, வாழவந்தான் தோட்டம் பகுதியைச் சோ்ந்த அமரகவி மகன் வழக்குரைஞா் ஜெயக்குமாரிடம் (33) கொடுத்ததும், தெரியவந்தது.
இது குறித்து ராயப்பன்பட்டி போலீஸாா் தமிழ்செல்வன்,விஜயக்குமாா் , ஜெயக்குமாா் ஆகிய 3 பேரை கைது செய்தனா். அவா்களிடமிருந்து திருடுபோன 17 பவுன் தங்க நகை, காா், ஏற்கெனவே திருட்டுக்கு பயன்படுத்தி வந்த மற்றெறாரு காரையும் பறிமுதல் செய்தனா்.