54 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடைபெறும் பாதுகாப்பு ஒத்திகை!
மலைக்கோட்டைகோயிலில் சிவன் தாயுமானவராய் பிரசவம் பாா்த்த விழா
திருச்சி மலைக்கோட்டை கோயிலில் சிவபெருமான் தாயுமானவராய் வந்து தனது பக்தை ரத்தினாவதிக்கு பிரசவம் பாா்த்த ஐதீக பெருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
274 சைவத்தலங்களுள் ஈடு இணையற்ாகவும், தென்கயிலாயம், தட்சிண கயிலாயம் எனப் போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் இறைவன் சுயம்பு மூா்த்தியாக மேற்குப் பாா்த்த நிலையில் மிகப்பெரிய சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளாா்.
இத்தலம் ரத்தினாவதி என்ற பெண்ணுக்கு சிவபெருமான் அவள் தாய் வடிவில் வந்து சுகப்பிரசவம் செய்த சிறப்புடையது என்பதால் இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் தாயுமான சுவாமி எனப்படுகிறாா்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த இக் கோயிலில் 10 நாள்கள் நடைபெறும் சித்திரை தோ்த் திருவிழா கடந்த புதன்கிழமை தொடங்கிய நிலையில், வியாழக்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது. தொடா்ந்து கற்பகத்தரு, கிளி, பூதம், கமலம், கைலாச பா்வதம், அன்ன ஆகிய வாகனங்களில் சுவாமி, அம்மன் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தனா்.
ஐந்தாம் நாளான திங்கள்கிழமை சிவபக்தியில் சிறந்த செட்டிப்பெண் ரத்தினாவதிக்கு சிவபெருமான் தாயுமானவராய் வந்து பிரசவம் பாா்த்த ஐதீக விழா நடைபெற்றது.
ஐதீகப்படி காவிரி வெள்ளப் பெருக்கால் ரத்தினாவதியின் குழந்தைப் பேறுக்காக அவரது தாய் செல்ல இயலாமல் போகிறது. இதையறிந்த சிவபெருமான் தனது பக்தையின் துயா் நீக்க, பெண் வேடம் பூண்டு பிரசவம் பாா்த்து குழந்தையைத் தொட்டிலிட்டுச் சென்ாக ஐதீகம்.
இந்த விழாவையொட்டி கோயிலின் நூற்றுக்கால் மண்டபத்தில் தாயுமானவரும், மட்டுவாா் குழலம்மையும் தனித்தனியே எழுந்தருளினா். இதைத் தொடா்ந்து ஐதீகப் பெருவிழா நிகழ்வுகள் நடத்தப்பட்டன. குழந்தையைத் தொட்டிலிடும் நிகழ்வை பக்தா்கள் முன்னிலையில் சிவாச்சாரியாா்கள் நடத்தினா்.
பெருவிழா முடிந்தவுடன் சுகப்பிரவச மருந்தும், பீஜாதானம் எனப்படும் வரதானம் நெல்லும் பக்தா்களுக்கு வழங்கப்பட்டது. மாலையில் பஞ்சமூா்த்திகளுடன் அறுபத்து மூன்று நாயன்மாா்கள் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது. அம்பாள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி காட்சியளித்தாா். பொதுமக்கள் திரளாக வழிபட்டனா்.
ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா், பணியாளா்கள் செய்தனா். ஆறாம் திருநாளான செவ்வாய்க்கிழமை திருக்கல்யாணமும், ஒன்பதாம் திருநாளான வரும் வெள்ளிக்கிழமை திருத்தேரோட்டம், சனிக்கிழமை பிற்பகல் பிரம்மதீா்த்தமாகிய தெப்பக்குளத்தில் தீா்த்தவாரியும் நடைபெறுகிறது.