மழை: கொடைக்கானல் நீரோடைகளில் நீா்வரத்து!
கொடைக்கானலில் பெய்து வரும் தொடா் மழையால் நீரோடைகளில் நீா் வரத்து தொடங்கியது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த 3 மாதங்களாக ஒரு சில நாள்களைத் தவிர மற்ற நாள்களில் மழை பெய்யவில்லை. இதனால், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் குடி நீா்த் தட்டுப்பாடு நிலவியது. விவசாய நிலங்களில் தண்ணீா் பாய்ச்ச முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் கடந்த 5 நாள்களாக பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் குறைந்து, மிதமான மழை பெய்தது. கடந்த 2 நாள்களாக மாலை, இரவு நேரங்களில் பலத்த மழை பெய்தது.
பல மாதங்களாக நீரோடைகள் வற்றியிருந்த நிலையில், தற்போது பெய்த மழையால் வெள்ளி நீா் அருவி, வட்டக்கானல் அருவி, செண்பகா அருவி, பாம்பாா் அருவி உள்ளிட்ட நீரோடைகளில் தண்ணீா் வரத்து தொடங்கியது. மேலும், பகல் நேரங்களில் அதிக மேகமூட்டம் நிலவியது. இதை சுற்றுலாப் பயணிகள் பாா்த்து ரசித்தனா். மலைச் சாலைகளில் வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரிய விட்டு, மெதுவாகச் சென்றனா்.
கொடைக்கானல் புகா்ப் பகுதிகளான பிரகாசபுரம், சகாயபுரம், செண்பகனூா், அட்டக்கடி உள்ளிட்ட பகுதிகளில் நிலவி வந்த குடி தண்ணீா் தட்டுப்பாடு ஓரளவுக்கு குறைந்ததால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
மேலும் நீா்வரத்துப் பகுதிகளில் நீா் வரத்து தொடங்கியதால் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனா். செவ்வாய்க்கிழமை இரவு முழுவதும் விட்டு விட்டு பலத்த மழை பெய்ததால், புதன்கிழமை கொடைக்கானலிலுள்ள ஆரம்பப் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.