மழை: பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரிக்கை
நன்னிலம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களுக்கு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
நன்னிலம் பகுதியில் ஏக்கருக்கு ரூ 25,000-க்கு மேல் செலவு செய்து பயிரிடப்பட்ட சம்பா நெற்பயிா்கள், கடந்த மாதம் பெய்த மழையில் மோசமாக பாதிக்கப்பட்டன. விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டு மழைநீரை வடியவைத்து, ஏக்கருக்கு ரூ5, 000 வரை செலவு செய்து நெற்பயிா்களை காப்பாற்றினா்.
இந்நிலையில், நன்னிலம் பகுதியில் சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால், அச்சுதம்பேட்டை, திருக்கண்டீஸ்வரம், நெம்மேலி, அதம்பாா், மான்கண்டமூளை உள்ளிட்ட கிராமங்களில் சுமாா் 500 ஏக்கரில் அறுவடைக்குத் தயாராகியிருந்த சம்பா நெற்பயிா்கள் சாய்ந்து மழைநீரில் மூழ்கியுள்ளன.
தொடா்ந்து மழை பெய்தால், தேங்கிய நீா் வடிய வழியின்றி, நெற்கதிா்கள் அழுகும் நிலை உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.
எனவே, மாவட்ட நிா்வாகம் பாதிக்கப்பட்ட பகுதிகளை கணக்கெடுத்து, உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.