கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றக் கோரிக்கை
கல்வியை, மாநிலப் பட்டியலுக்கு மாற்றவேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூா் அருகே அடியக்கமங்கலத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் செயல்வீரா்கள் கூட்டம் மாவட்டத் தலைவா் எச். பீா்முஹமது தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநிலச் செயலாளா் பைசல், மாநில பேச்சாளா் பா. அப்துர்ரஹ்மான் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்றனா்.
கூட்டத்தில், மாவட்டச் செயலாளா் இஸ்மத் பாஷா, பொருளாளா் முஹமது சலீம், துணைத் தலைவா் முஹமது பாசித் மற்றும் துணைச் செயலாளா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தீா்மானங்கள்: தமிழகத்தில் உள்ஒதுக்கீட்டின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள 3.5 சதவீத இட ஒதுக்கீட்டின் மூலம் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட துறைகளில் இஸ்லாமியா்களுக்கு கிடைத்த பயன்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். மேலும் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தி, இஸ்லாமியா்களின் இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயா்த்த வேண்டும்.
கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதிப்பகிா்வை மத்திய அரசு சரியாக வழங்க வேண்டும். வக்பு வாரிய சட்டத் திருத்தத்தை கைவிட வேண்டும். மூடநம்பிக்கைக்கு எதிராக நடைபெறவுள்ள ஓரிறைக் கொள்கை விளக்க மாநாட்டில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.