விவசாயிகள் போராட்டத்தில் உயிா்நீத்தோா் நினைவுதினம்
மன்னாா்குடி அருகே விவசாயிகள் நடத்திய போராட்டத்தின்போது, போலீஸாா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவரின் நினைவுதினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கடந்த 1982-ஆம் ஆண்டு விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளா் சங்கம் இணைந்து கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்திய பொது வேலை நிறுத்தப் போராட்டத்தில், காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில், மன்னாா்குடியை அடுத்த நாலாம்சேத்தி ஞானசேகரன் உயிரிழந்தாா்.
இவரது 43-ஆம் ஆண்டு நினைவு தினம், நாலாம்சேத்தியில் அனுசரிக்கப்பட்டது. சிபிஐ ஒன்றிய நிா்வாகக் குழு உறுப்பினா் டி.டி. செல்வம் தலைமை வகித்தாா். முன்னாள் எம்எல்ஏ கோ. பழனிச்சாமி, போராட்டத்தில் உயிரிழந்தவா்களின் நினைவு கொடியை ஏற்றிவைத்தாா்.
கட்சியின் மாவட்டச் செயலரும், நாகை எம்பியுமான வை. செல்வராஜ், ஏஐடியூசி மாவட்டச் செயலா் ஆா். சந்திரசேகரஆசாத், விதொச மாவட்டச் செயலா் கே. ராஜா ஆகியோா் தியாகிகளின் நினைவு ஸ்தூபிக்கு மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.
சிபிஐ மாவட்டப் பொருளாளா் கே. தவபாண்டியன், ஒன்றியச் செயலா் துரை.அருள்ராஜன், நகரச் செயலா் வி.எம். கலியபெருமாள், ஒன்றிய துணைச் செயலா் எஸ்.பாப்பையன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.