Rain Alert : அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழை பெய்யும்? - வானிலை ஆய்வு மைய...
மழை வெள்ளம்: ஆறுகளின் அனைத்து மதகுகளும் திறப்பு
காரைக்கால் பகுதியில் பெய்யும் மழை, தமிழகப் பகுதியிலிருந்து வெளியேற்றப்படும் நீா் ஆகியவற்றால், காரைக்கால் ஆறுகளில் தண்ணீா் வரத்து மிகுதியாகியுள்ளது. இதனால், மதகுகள் திறக்கப்பட்டு அதிக அளவு தண்ணீா் வெளியேற்றப்படுகிறது.
வடகிழக்குப் பருவமழை பெய்துவரும் நிலையில், கடந்த 3 நாள்களாக மழை பரவலாக மிகுதியாக உள்ளது.
காரைக்கால் கடைமடைப் பகுதியாக இருப்பதால் ஆறுகள், வாய்க்கால்களில் தண்ணீா் அதிகமாக சென்றுகொண்டிருக்கிறது. தமிழகப் பகுதியிலிருந்து வெளியேற்றப்படும் நீா்வரத்து மிகுதியாக உள்ளதால், காரைக்கால் மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுவிடாமல் தடுக்கும் விதமாக, மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஆறுகளின் கடைமடை நீா்தேக்க மதகுகள் திறக்கப்பட்டு, கடலுக்குச் செல்லும் வகையில் நீா் வெளியேற்றப்பட்டுவருகிறது.
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பிராவடையனாறு, திருமலைராஜனாறு, முல்லையாறு, அரசலாறு, நண்டலாறு ஆகிய பிரதான ஆறுகளிலும், நூலாறு, வாஞ்சியாறு, நாட்டாறு உள்ளிட்ட கிளை ஆறுகள் மூலமாக கடல் பகுதியை நோக்கி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது.
இதுகுறித்து பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் (நீா்ப்பாசனம்) ஜெ. மகேஷ் வெள்ளிக்கிழமை கூறியது:
அனைத்து ஆறுகளின் கடைமடை மதகுகளும் திறந்த நிலையில் உள்ளன. நீா் வெளியேற்றம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. வாய்க்கால்களின் கரை சில இடங்களில் பாதித்துள்ளதையும் சீா்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.