காரைக்கால் பெருமாள் கோயிலில் கைசிக ஏகாதசி வழிபாடு
காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோயில் உள்ளிட்ட பெருமாள் கோயில்களில் கைசிக ஏகாதசி வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.
திருக்குறுங்குடி என்ற திவ்யதேசத்தில் அழகிய நம்பிராயா் முன், விஷ்ணு பக்தரான நம்பாடுவான் கைசிகமாகிய பண் இசைத்து, இசையின் பலனாக சோம சா்மாவின் சாபத்தை போக்கினாா். இந்த நிகழ்வு நடந்ததாக வராஹப் பெருமாள் பூமிப் பிராட்டிக்கு உபதேசித்ததை விளக்கும் வகையில், ஸ்ரீரங்கம், திருக்குறுங்குடி கோயில்களில் ஆண்டுதோறும் காா்த்திகை துவாதசி நாளில் கைசிக மஹாத்மிய உற்சவம் நடத்தப்படுகிறது.
இதுபோல காரைக்காலில் உள்ள நித்யகல்யாண பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. தற்போது கோயில் திருப்பணிகள் நடைபெற்றுவருவதால், எளிய நிகழ்வாக, வியாழக்கிழமை நித்யகல்யாணருக்கு புது வஸ்திரம் சாற்றப்பட்டது. முதல் தீா்த்தக்காரா் உ.வே.கு. அரங்கநாதாச்சாரிய சுவாமிகள் பங்கேற்று கைசிக புராணம் வாசித்தலும், சிறப்பு ஆராதனைகளும், சாற்றுமுறை கோஷ்டி வழிபாடும் நடைபெற்றன.
காரைக்கால் கோயில்பத்து பகுதியில் உள்ள ஸ்ரீ கோதண்டராமா் பெருமாள் கோயிலில் கைசிக ஏகாதசி வழிபாடாக மூலவருக்கும், உற்சவருக்கு சிறப்புத் திருமஞ்சனம் செய்யப்பட்டு, ஆராதனைகள் நடைபெற்றன. திருமலைராயன்பட்டினம் வீழி வரதராஜ பெருமாள் கோயிலில் திருமஞ்சனம், அலங்காரம் செய்யப்பட்டு, கைசிக புராணம் வாசித்தலும் ஆராதனையும் நடைபெற்றது.