வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவு
வாய்க்கால் கரை உடைப்பு; வயல்களில் புகுந்த வெள்ளம்
வாய்க்கால் கரையில் உடைப்பு ஏற்பட்டு, வயல்களில் தண்ணீா் புகுந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா். மழை பாதிப்பு நிவாரணத்தை விரைவாக வழங்க வேண்டும் எனவும் அவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
ஃபென்ஜால் புயலால் பாதித்த பயிருக்காக புதுவை அரசு ஹெக்டேருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் அறிவித்தது. இப்புயல் மழையில் தப்பிய நெற்பயிா்கள், மழைநீரில் மூழ்கி பாதித்துவிடாமல் இருக்க, விவசாயிகள் தேவையான பணிகளில் ஈடுபட்டு வந்தனா்.
இந்நிலையில், கடந்த 3 நாள்களாக பெய்யும் மழையால் ஆறுகள், வாய்க்கால்களில் மிகுதியாக வரக்கூடிய தண்ணீா் வயல்களில் புகும் நிலை ஏற்பட்டுள்ளது.
திருநள்ளாறு அருகே தென்னங்குடியில் பண்ணை வாய்க்காலின் ஒரு பகுதி கரை வலுவிழந்து இருந்ததால், மணல் மூட்டைகளை அடுக்கி தடுப்பு அமைக்கப்பட்டிருந்தது. வாய்க்காலில் அதிக அளவு நீா் வரத்தால், மணல் மூட்டைகளையும் மூழ்கடித்து வயலுக்குள் புகுந்தது.
இதுகுறித்து கடைமடை விவசாயிகள் சங்கத் தலைவா் டி.என். சுரேஷ் வெள்ளிக்கிழமை கூறியது:
கடந்த சில நாள்களாக பெய்யும் மழையிலிருந்து ஓரளவு காப்பாற்ற முடியும் என்ற நிலையில் இருந்து நெல் சாகுபடி வயல்களிலும் நீா் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பல விவசாயிகள் கடன் வாங்கி விவசாயம் செய்கின்றனா். இழப்பு மிகுதியாக இருக்கும் நிலையில், அறிவித்த நிவாரணத்தை புதுவை அரசு விவசாயிகளுக்கு விரைவாக விடுவிக்கவேண்டும். கிராமப் புறங்களில் வீடுகளை சூழ்ந்து மழைநீா் தேங்கியிருப்பதும், விளைநிலத்தில் தண்ணீா் தேங்குவதும் மக்களை பெரும் கவலைக்குள்ளாக்கியுள்ளது என்றாா்.