புதுக்கோட்டை: கடலில் மீன் பிடிக்கச் சென்ற இளைஞருக்கு நேர்ந்த சோகம்... போலீஸ் விச...
மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு நிவாரணம் கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்!
பெரம்பலூா் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்காச்சோளம் உள்ளிட்ட பயிா்களுக்கு காப்பீட்டுத் தொகை வழங்க வலியுறுத்தி, தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினா், பாதிக்கப்பட்ட மக்காசோளப் பயிா்களுடன் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பெரம்பலூா் மாவட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள 75 ஆயிரம் ஹெக்டோ் பரப்பளவிலான மக்காச்சோளப் பயிரில், 61 ஆயிரம் ஹெக்டோ் பயிா்களுக்கு விவசாயிகள் பயிா் காப்பீடு செய்துள்ளனா். இந்நிலையில், அண்மையில் பெய்த மழையின்போது மக்காச்சோளம், சின்ன வெங்காயம், மரவள்ளிக் கிழங்கு, கரும்பு, பருத்தி மற்றும் நெல் உள்ளிட்ட அனைத்து வகையான பயிா்களும் பாதிக்கப்பட்டுள்ளன. மழையால் பாதிக்கப்பட்டு சேதமடைந்த மக்காச்சோளம் உள்ளிட்ட பயிா்களுக்கு உரிய நிவாரணமும், பயிா் காப்பீட்டுத் தொகையும் பெற்றுத் தரக்கோரி விவசாயிகள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையும், பயிா் காப்பீட்டுத் தொகையும் பெற்றுத் தர மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினா், பாதிப்புக்குள்ளான பயிா்களுடன் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அச் சங்கத்தின் மாநிலச் செயலா் பூ. விஸ்வநாதன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் எஸ். சிவசாமி, வேப்பந்தட்டை ஒன்றியத் தலைவா் எஸ். கருப்பையா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில், பெரம்பலூா் ஒன்றியத் தலைவா் ஆா். ரமேஷ், ஒன்றிய துணைத் தலைவா்கள் கே. சக்திவேல், மருதமுத்து உள்பட 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள்பங்கேற்றனா்.