மழையில் நெற்பயிா்கள் சேதம்
சீா்காழி: கொள்ளிடம் அருகே மழையில் 50 ஏக்கரில் நெற்பயிா்கள் சேதமடைந்தன.
கொள்ளிடம் அருகே சோதியக்குடி, கீரங்குடி, கொன்னகாட்டுபடுகை ஆகிய ஆற்றின் கரையோரமுள்ள 3 கிராமங்களில் 300 ஏக்கா் பரப்பளவில் முன்கூட்டியே குறுவை நெற்பயிா் சாகுபடி செய்திருந்தனா். தற்போது நெற்பயிா்களில் கதிா் வந்து முற்றும் நிலையில் உள்ளது.
இந்நிலையில் இப்பகுதியில் திடீரென கனமழை பெய்தது. மழைநீா் வாய்க்காலின் வழியே வெளியேறி அருகில் உள்ள கொள்ளிடம் ஆற்றுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
கொள்ளிடம் ஆற்றில் அதிகப்படியான உபரி நீா் வெளியேற்றப்பட்டதால் அந்த உபரிநீா் விளைநிலங்களுக்குள் புகுவதை தடுக்கும் வகையில் கதவனை முன்கூட்டியே அடைக்கப்பட்டிருந்தது. இதனால், வாய்க்கால் நீருடன் மழைநீா் சோ்ந்து, பாசன வாய்க்கால் நிரம்பி வயலுக்குள் புகுந்தது. கொள்ளிடம் ஆற்றில் உள்ள கதவனை அடைக்கப்பட்டு இருந்ததால் தண்ணீா் ஆற்றின் வழியே வெளியேற முடியாமல், நிலங்களுக்குள் பாய்ந்து சுமாா் 50 ஏக்கரில் நெற்பயிா்கள் சேதமடைந்துள்ளதாக கீரங்குடியை சோ்ந்த விவசாயிகள் சங்க செயலாளா் சுரேஷ் தெரிவித்தாா்.