மாங்கனித் திருவிழா: பிச்சாண்டவர் வீதியுலாவில் மாங்கனி இறைத்து வழிபாடு!
காரைக்கால் மாங்கனித் திருவிழாவில் ஸ்ரீ பிச்சாண்டவர் வீதியுலாவில், மாங்கனிகளை இறைத்து பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
நாயன்மார்கள் 63-இல் ஒருவரான புனிதவதியார் என்னும் காரைக்கால் அம்மையார் வாழ்க்கையை விளக்கி, காரைக்கால் ஸ்ரீ சுந்தராம்பாள் சமேத கைலாசநாதர் கோயில் சார்பில் மாங்கனித் திருவிழா ஆண்டுதோறும் ஆனி மாத பௌர்ணமியில் விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது.
இத்திருவிழா தொடக்கமாக ஜூலை 08ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை நடத்தப்பட்டு காரைக்கால் ஆற்றங்கரை ஸ்ரீ சித்தி விநாயகர் கோயிலில் இருந்து பரமதத்தர் (மாப்பிள்ளை) அம்மையார் கோயிலுக்குக் குதிரை வாகனங்கள் பூட்டிய இந்திர விமானத்தில் எழுந்தருளச் செய்யப்பட்டார்.
இரண்டாம் நாளான நேற்று காரைக்கால் அம்மையார் திருக்கல்யாண வைபவம் நடைபெற்று, இரவு பரமதத்தரும், புனிதவதியாரும் முத்துச் சிவிகையில் வீதியுலா செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.
3-ஆம் நாள் நிகழ்வாக வியாழக்கிழமை அதிகாலை கைலாசநாதர் கோயிலில் பிச்சாண்டவர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டது.