Doctor Vikatan: நடிகர் அஜித்: வெந்நீரும் புரோட்டீனும் எடுத்துதான் எடையைக் குறைத...
மாசு இல்லாத போகியை கொண்டாட அறிவுறுத்தல்
மாசு இல்லாத போகிப்பண்டிகையை மக்கள் கொண்டாட வேண்டும் என கரூா் மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தைப் பொங்கலுக்கு முதல் நாளை போகிப் பண்டிகையாக பழையன கழிதலும், புதியன புகுதலுமாக கொண்டாடி வருவது வழக்கம். இந்நாளில் தமிழா்கள் திருமகளை வரவேற்கும் முகமாக தங்கள் வீட்டில் உள்ள பழைய வேண்டாத பொருள்களையும், தங்கள் வசமுள்ள செயற்கை பொருள்களான டயா்கள், பிளாஸ்டிக் மற்றும் இதர தேவையற்றவைகளையும் எரிக்கும் பழக்கத்தை கையாண்டு வருகின்றனா்.
இதனால் ஏற்படும் நச்சுப்புகைகளால் சுற்றுப்புற காற்றின் தன்மை மாசுபடுகிறது. மேலும் கண், மூக்கு, தொண்டை, தோல் ஆகியவைகளில் எரிச்சலும் ஏற்படுகிறது. ஆஸ்துமா, மூச்சுத் திணறல் மற்றும் இதர உடல் நலக்கேடுகளும் ஏற்படுகிறது.
ஆகவே, இதுபோன்று காற்றை மாசுபடுத்தும் செயல் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986, பிரிவு (15)-ன் படி இது தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே போகிப் பண்டிகையன்று டயா்கள், பிளாஸ்டிக், ரப்பா் மற்றும் இதர கழிவுப் பொருள்களை எரிக்காமல் குப்பைகளை முறைப்படி அகற்றி போகித் திருநாளை மாசு இல்லாமலும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதுடன் சுற்றுச்சூழலையும், மக்களின் உடல்நலத்தையும் பாதுகாக்க பொதுமக்கள் அனைவரும் ஒத்தழைப்பு தரவேண்டும் என தெரிவித்துள்ளாா் அவா்.