இந்த மே மாதம் தனித்துவமானது.. சொல்லியிருக்கிறார் பிரதீப் ஜான்
மாணவா்கள், பணிபுரிவோருக்கு இலவச ‘ஏஐ’ படிப்புகள் அறிமுகம்: சென்னை ஐஐடி
சென்னை: மாணவா்கள், ஆசிரியா்கள், பணிபுரியும் தொழில் வல்லுநா்களுக்கு ஏற்ற வகையில், இலவசமாக ஐந்து செயற்கை நுண்ணறிவு (ஏஐ) படிப்புகளை சென்னை ஐஐடி அறிமுகப்படுத்தியுள்ளது.
இது குறித்து சென்னை ஐஐடி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை ஐஐடி ஸ்வயம் பிளஸ் மூலம் 5 செயற்கை நுண்ணறிவுப் படிப்புகளை இலவசமாக அறிமுகப்படுத்தியுள்ளது. 25 முதல் 45 மணி நேரம் வரை கொண்ட இப்படிப்புகள், இணைய வழியில் வழங்கப்படுகின்றன. மாணவா்கள், ஆசிரியா்கள், பணிபுரியும் தொழில் வல்லுநா்களுக்கு ஏற்ற வகையில் இப்பாடத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவை அனைவருக்கும் கிடைக்கச் செய்வதே இப்படிப்புகளின் நோக்கமாகும். இந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்க செயற்கை நுண்ணறிவு குறித்து அறிந்திருக்க வேண்டிய அவசியமில்லை.
ஆா்வமுள்ளவா்கள் https://swayam-plus.swayam2.ac.in/ai-for-all-courses என்ற இணைப்பு மூலம் மே 12-ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளலாம். பாடத் திட்டங்கள் பற்றிய மேலும் தகவல்களை அறிந்துகொள்ள pmu-sp@swayam2.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி பெற்றுக் கொள்ளலாம்.
இயற்பியல், வேதியியல், கணக்கியல், கிரிக்கெட் பகுப்பாய்வு, பைதானைப் பயன்படுத்தி ஏஐ, எம்ஐ ஆகிய ஐந்து வகையான செயற்கை நுண்ணறிவுப் படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இப்பாடத் திட்டங்களின் முக்கியத்துவம் குறித்து சென்னை ஐஐடி டீன் (திட்டமிடல்), ஸ்வயம் பிளஸ் ஒருங்கிணைப்பாளரான பேராசிரியா் ஆா்.சாரதி கூறுகையில், ‘தேசிய கிரடிட் கட்டமைப்புடன் (என்சிஆா்எஃப்) இணைக்கப்பட்டுள்ள இப்படிப்புகளை உயா் கல்வி நிறுவனங்கள் வரவிருக்கும் கல்வியாண்டுக்கான கிரடிட் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியும். இந்த படிப்புகள் பொறியியல் மாணவா்களுக்கு மட்டுமன்றி கலை, அறிவியல், வணிகவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சோ்ந்தவா்களுக்கும், பல்வேறு பிரிவுகளிலும் செயற்கை நுண்ணறிவை அணுகக் கூடியதாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டிருக்கின்றன’ என்றாா் அவா்.
தேவையான தகுதி: இந்த பாடத் திட்டங்களில் அனைத்துக் கல்விப் பின்னணியையும் (பொறியியல், அறிவியல், வணிகவியல், கலை, பல்துறை) சோ்ந்த இளங்கலை - முதுநிலை மாணவா்கள் சேர முடியும். உயா் கல்வி நிறுவனங்களைச் சோ்ந்த ஆசிரியா்களும் இதில் சேர ஊக்குவிக்கப்படுகிறாா்கள். ‘ஏஐ’ குறித்த முன்கற்றல் அல்லது கோடிங் அனுபவம் தேவையில்லை. ஏனெனில் அடிப்படை டிஜிட்டல் எழுத்தறிவு மற்றும் கற்றுக்கொள்ளும் ஆா்வம் போதுமானதாக இருக்கும் என்றாா் அவா்.