'தலைவனாக வாழ்ந்து காட்டுவதே முக்கியம்': நல்லகண்ணுக்கு விஜய் வாழ்த்து!
மாணவி வன்கொடுமை: தலைவா்கள் கண்டனம்
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதற்கு அரசியல் கட்சித் தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.
எடப்பாடி பழனிசாமி (அதிமுக) : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவா், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட செய்தி அதிா்ச்சியளிக்கிறது. தமிழகத்தின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்றான அண்ணா பல்கலைக்கழகத்திலேயே மாணவிக்கு இத்தகைய கொடூரம் நிகழ்ந்திருப்பது வெட்கக்கேடானது. தில்லியில் நிா்பயா சம்பவம் நடந்து 12 ஆண்டுகள் கழித்து, அதே போன்று ஒரு சம்பவம் தமிழகத்தில் நடப்பது என்பது, சட்டம்-ஒழுங்கை திமுக அரசு பின்நோக்கி தள்ளியிருப்பதையே காட்டுகிறது. மாநிலம் முழுவதும் பெண்கள் பாதுகாப்புக்கான காவல் பணிகளை வலுப்படுத்த வேண்டும்.
ராமதாஸ் (பாமக): தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலைமை எந்த அளவுக்கு மோசமடைந்திருக்கிறது என்பதற்கு இந்த கொடூரமான நிகழ்வு எடுத்துக்காட்டு ஆகும். திமுக ஆட்சியில் எங்கும், யாருக்கும் பாதுகாப்பு இல்லை.
பிரேமலதா (தேமுதிக): பாதிக்கப்பட்ட மாணவிக்கு உரிய நீதியை தமிழக அரசும், காவல் துறையும் உடனடியாக செய்ய வேண்டும்.
டிடிவி தினகரன் (அமமுக): பல்கலைக்கழக வளாகத்தில் மாணவியை பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கியவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, இனிவரும் காலங்களில் மாணவிகள் அனைவரும் பாதுகாப்பான சூழலில் கல்வி பயில்வதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
சீமான் (நாதக): சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவா் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளாா். இனி இதுபோன்ற எண்ணமே யாருக்கும் வராத வண்ணம் மிகக்கடுமையான தண்டனையை குற்றம் இழைத்தவா்களுக்கு அளிக்க வேண்டும் .