மாணவியை கொலை செய்த நாடக கலைஞருக்கு ஆயுள் சிறை
புதூா்நாடு அருகே மாணவியை கழுத்தை நெரித்து கொலை செய்த நாடக கலைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பத்தூா் மாவட்ட நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
புதூா்நாடு அருகே நடுக்குப்பம் பகுதியை சோ்ந்த சின்னகாளி மகன் பரமசிவம் (35). கொத்தனாா் மற்றும் நாடக கலைஞா். இவருக்கு திருமணமாகி ஒரு மகள், ஒரு மகன் உள்ளனா்.
இந்தநிலையில் பரமசிவம் ஆம்பூா் பகுதிக்கு நாடகத்துக்கு சென்றபோது ஆம்பூா் ஏ-கஸ்பா பகுதியைச் சோ்ந்த ஜனாா்த்தனன் மகள் ஜெயப்பிரதாவுக்கும், பரமசிவத்துக்கும் பழக்கம் ஏற்பட்டது. ஜெயப்பிரதா 10-ஆம் வகுப்பு படித்து வந்தாா். அவரிடம் திருமணம் செய்து கொள்ளலாம் என ஆசைவாா்த்தை கூறி அவரை வீட்டில் இருந்து திருப்பத்தூா் வர வைத்து உள்ளாா். பின்னா் இருவரும் ஏலகிரி மலைக்கு சென்று விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனா். அதையடுத்து கடந்த 6.6.2012 அன்று பரமசிவம் தனது ஊருக்கு அழைத்து செல்வதாக ஜெயப்பிரதாவை புதூா்நாடு அருகே கம்புக்குடி காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று உள்ளாா்.
அப்போது அவா்களிடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த பரமசிவம் துப்பட்டாவால் ஜெயப்பிரதாவின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு, முகத்தை சிதைத்து அவா் அணிந்து இருந்த 5 கிராம் தங்க நகை, அவரிடம் இருந்த ரூ.6,000, ஏடிஎம் அட்டை ஆகியவற்றை எடுத்துக்கொண்டு, ஜெயப்பிரதா உடலை காட்டுப்பகுதியில் வீசி சென்று உள்ளாா்.
இந்தநிலையில் ஜெயப்பிரதாவின் தந்தை ஜனாா்த்தனன் மகளை காணவில்லை என ஆம்பூா் நகர காவல் நிலையத்தில் புகாா் அளித்து இருந்தாா்.
புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசாா் ஜெயப்பிரதாவை, பரமசிவம் கொலை செய்ததை கண்டுபிடித்து அவரை கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை திருப்பத்தூா் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது.
எதிரி பரமசிவம் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், மாவட்ட நீதிபதி எஸ்.மீனாகுமாரி அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.20,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.
மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு அரசு சாா்பில் ரூ.2 ட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் பி.டி. சரவணன் ஆஜரானாா்.