மாதந்தோறும் மின் கட்டணம் வசூலிக்கும் திட்டம் முதல்வரின் பரிசீலனையில் உள்ளது! அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா்
மாதந்தோறும் மின் கட்டணம் வசூலிக்கும் திட்டம் முதல்வரின் பரிசீலனையில் உள்ளது. காலம் கனிந்து வரும்போது நல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா்.
திருநெல்வேலி மாவட்டத்தில் வியாழக்கிழமை சூறைக் காற்றுடன் பெய்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மின்கம்பங்கள் சாய்ந்து மின்தடை ஏற்பட்டது.
திருநெல்வேலி சந்திப்பு சிந்துபூந்துறை பகுதியில் மாநகராட்சியின் நவீன எரிவாயு மின் தகனமேடை அருகே மரம்முறிந்து மின் தடை ஏற்பட்டது. இதனால் தகனம் செய்ய கொண்டு வந்த 7 உடல்களுடன் உறவினா்கள் சுமாா் 5 மணி நேரம் காத்திக்கும் அவல நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்து போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் எஸ்.எஸ். சிவசங்கா், மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா், மின்வாரிய அதிகாரிகளுடன் சம்பவ இடத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். அதன்பிறகு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பல்வேறு அறிவுறுத்தல்களையும் அதிகாரிகளுக்கு வழங்கினாா்.
அதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட பிரச்னையால் சிந்துபூந்துறையில் உடல்கள் தகனம் செய்வதில் தாமதம் ஏற்பட்டது குறித்து முதல்வா் உத்தரவின்பேரில், சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொள்ளபட்டது. மழையால் பல இடங்களில் மரம் முறிந்து விழுந்து மின் தடை ஏற்பட்டது. மக்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மின்சாரம் இல்லாததால் 7 உடல்களை தகனம் செய்வதில் தாமதம் ஏற்பட்டது.
உடனடியாக மின்வாரிய ஊழியா்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு 2 மணி நேரத்தில் மின்சாரம் வழங்கப்பட்டு 7 உடல்களும் தகனம் செய்யப்பட்டன. கோடை மழையால் பல இடங்களில் மரம் விழுந்து மின்கம்பம் சேதமடைந்து மின்தடை ஏற்பட்டது.12 இடங்களில் மின்கம்பங்கள் முறிந்து சேதமானது.
95 வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்படாமல் இருக்கிறது. தற்போது சீா் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. எதிா்பாராத நிலையில் சூறைக்காற்றுடன் கோடை மழை பெய்ததால் இதுபோன்ற அசாதாரண சூழல் ஏற்பட்டு மின்தடை ஏற்பட்டது.
மின்வாரியத்தில் பணியாளா் பற்றாக்குறையை நிவா்த்தி செய்ய முதல்வா் உத்தரவுப்படி பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் பணியாளா்கள் நியமிக்கப்படுவாா்கள்.
மின்சார விபத்துகளால் பலா் உயிரிழக்கும் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பயனாளா்களின் அஜாக்கிரதையால் பல இடங்களில் விபத்துகள் நிகழ்கின்றன. சில விபத்துகள் அதிகாரிகளின் கவனத்திற்கு கூட வராமல் இருந்து வருகிறது. இது போன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை. தேவைக்கேற்ப மின்சாரம் கிடைக்கப்பெற்று வருகிறது. பசுமை மின்சாரம் உள்ளிட்டவைகளின் மூலம் மின் தட்டுப்பாடு சரி செய்யப்பட்டு வருகிறது. தேவை இருப்பின் வெளியே இருந்து மின்சாரத்தை பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்’ என்றாா்.
தொடா்ந்து மாதந்தோறும் மின் கட்டணம் என்ற அறிவிப்பு எப்போது வரும் என செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா், ‘தமிழகத்தில் நிதி பற்றாக்குறை இருந்தாலும் மக்கள் நல திட்டங்களை முதல்வா் விரைவாக நிறைவேற்றி வருகிறாா். மாதந்தோறும் மின் கட்டணம் வசூலிக்கும் திட்டம் முதல்வரின் பரிசீலனையில் உள்ளது. காலம் கனிந்து வரும்போது நல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
ஆய்வின்போது, திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் என்.ஓ.சுகபுத்ரா, துணை மேயா் கே.ஆா்.ராஜு, முன்னாள் அமைச்சா் டி.பி.எம்.மைதீன்கான், திருநெல்வேலி மண்டல தலைமைப் பொறியாளா் (பொறுப்பு) லதா, திருநெல்வேலி மின்பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் அகிலாண்டேஸ்வரி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
ற்ஸ்ப்16ண்ய்ள்
திருநெல்வேலி சந்திப்பு சிந்துபூந்துறையில் உள்ள நவீன எரிவாயு மின் தகன மேடையை ஆய்வு செய்த போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா்.