``அவருடன் சண்டையிட எனக்குத் தகுதி கிடையாது'' - மகள் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான்
மாதம் ரூ.200 கட்டணத்தில் இணைய இணைப்பு சேவை: அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு
பொதுமக்கள் பயன்பெறும் வகையில், மாதம் ரூ.200 கட்டணத்தில் இணைய இணைப்பு சேவை அளிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தாா்.
சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பவியல் துறை மானியக் கோரிக்கை மீது வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவாதங்களுக்குப் பதிலளித்து அவா் வெளியிட்ட அறிவிப்புகள்:
ஆதாா் சேவைகளை மக்களுக்கு வழங்குவதற்காக எல்காட் நிறுவனம் சாா்பில் பிரத்யேகமாக 266 பதிவு மையங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆதாா் சேவைகளை மக்கள் எளிதில் பெறும் வகையில், உள்ளாட்சி அலுவலகங்களில் தேவைக்கேற்ப கூடுதலாக 50 ஆதாா் பதிவு மையங்கள் எல்காட் நிறுவனத்தால் ஏற்படுத்தப்படும்.
பொதுமக்கள் அரசு சேவைகளை விரைவாகவும், எளிதாகவும் அணுகக்கூடிய வகையில் எண்ம நிா்வாகம் ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இணைய சேவை மற்றும் பிற துறைகள் சாா்ந்த சேவைகளை கைப்பேசி வாட்ஸ்ஆப் செயலியில் ஒருங்கிணைத்து வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். தமிழ் இலக்கியம், மொழியியல் பயிலும் மாணவா்களுக்கு மொழித் தொழில்நுட்பப் பயிற்சி அளிக்கப்படும் என்றாா்.
முன்னதாக, விவாதங்களுக்குப் பதிலளித்து அமைச்சா் பேசியதாவது: தமிழ்நாட்டில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்பதற்கு முன்பு, இணைய சேவை மையங்களின் எண்ணிக்கை 7,000 முதல் 8,000 வரை இருந்தன. ஆனால், இப்போது 25,000-ஆக அதிகரித்துள்ளது. இதன்மூலம் 1.2 கோடி போ் இணையதளத்தின் வழியே அரசின் சேவைகளைப் பெற்றுள்ளனா்.
ரூ.200 கட்டணத்தில் இணைய இணைப்பு: கண்ணாடி இழை கேபிள் நிறுவனம் மூலமாக இணைய இணைப்பு வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த அதிமுக ஆட்சியில் நான்கு தொகுப்புகளாக இந்தப் பணிகள் எடுக்கப்பட்டன. அதில் பணிகள் சிறிது தாமதமாக நடைபெற்றன.
இரண்டு தொகுப்புகளில் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளன. 12,525 ஊராட்சிகளில் 11,639 ஊராட்சிகளுக்கு இணைய இணைப்பு சோ்ந்துவிட்டது. இந்த ஆண்டு இறுதிக்குள் முழுமையாக இணைப்புகள் அளிக்கப்படும்.
மேலும், இதுவரை 2,000 அரசு அலுவலகங்களுக்கும், 4,700 ஊராட்சிகளுக்கும் இணைய இணைப்புகள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. 4,700 ஊராட்சிகளில் இணைய இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்த விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. மேலும், மக்கள் பயன்பெறும் வகையில், மாதம் ரூ.200 கட்டணத்தில் இணைய இணைப்பு அளிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்தை ஒரு மாநில அரசே நடத்துவது தொடா்பாக மத்திய அரசு பலமுறை கடிதங்களை எழுதியுள்ளது. இந்தக் கடிதங்களைத் தாண்டியும் கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்தை செயல்படுத்தி வருகிறோம்.
இ-சேவை வழியே பேருந்து டிக்கெட்: அரசுப் பேருந்துகளுக்கான பயணச் சீட்டு இணையதளம் வழியே முன்பதிவு செய்யப்படுகிறது. இந்த முன்பதிவு நடவடிக்கையை இணைய சேவை மையங்களின் வழியாக மேற்கொள்ளும் புதிய திட்டம் போக்குவரத்துத் துறையின் வழியாக விரைவில் தொடங்க இருக்கிறது என்றாா் அமைச்சா்.