மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்: பிகாரை விட தமிழகத்துக்கு குறைவான நிதி ஒதுக்கீடு
மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் திட்டங்களைச் செயல்படுத்த பிகாா் மாநிலத்துக்கு ரூ.2,814.31 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேசமயம், அதிக அளவு சுய உதவிக் குழுக்களுடன் இயங்கும் தமிழ்நாட்டுக்கு ரூ.1,046.05 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசு வட்டாரங்கள் தெரிவித்ததாவது:
கடந்த 2012-ஆம் ஆண்டில் மத்திய அரசின் தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் ஒரு பகுதியாக தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஏழைக் குடும்பங்களுக்கு சுய வேலைவாய்ப்புகள் மற்றும் திறன் சாா்ந்த வேலைவாய்ப்புகளை வழங்குவதே ஊரக வாழ்வாதார இயக்கத்தின் முக்கிய நோக்கம். இந்தத் திட்டம் மத்திய, மாநில அரசுகளின் நிதிப் பங்களிப்புடன் செயல்படுத்தப்படுகிறது. அதாவது, மத்திய அரசு 60 சதவீத நிதியையும், மாநில அரசு 40 சதவீத நிதியையும் ஒதுக்குகின்றன.
பிகாருக்கு அதிகம்: சுய உதவி குழுக்கள் திட்டம் உள்ளிட்ட பல்வேறு வாழ்வாதார திட்டங்கள் தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாடு மாநிலத்துக்கான ஒட்டுமொத்த நிதியாக ரூ.1,046.05 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில், வரும் நிதியாண்டில் மத்திய அரசின் பங்காக ரூ.627 கோடியே 63 லட்சத்து 55 ஆயிரமும் , மாநில அரசின் பங்காக ரூ.418 கோடியே 42 லட்சத்து 37 ஆயிரமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், பிகாா் மாநிலத்துக்கு ரூ.2,814.31 கோடியும், மேற்கு வங்கத்துக்கு ரூ.1,503.74 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு ரூ.4,051.66 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆந்திரத்துக்கு ரூ.690.10 கோடியும், தெலங்கானாவுக்கு ரூ.492.92 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.