மாநிலம் முழுவதும் ஜன. 26-இல் டிராக்டா் பேரணி: பி.ஆா். பாண்டியன்
பஞ்சாப், ஹரியாணா விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக, தமிழகம் முழுவதும் ஜன.26-இல் டிராக்டா் பேரணி நடைபெறும் என்று தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
அரசியல் சாா்பற்ற சம்யுக்த கிசான் மோா்சா அமைப்பின் சாா்பில் கடந்த ஆண்டு பிப்ரவரி 13-ஆம் தேதி சண்டிகரிலிருந்து புதுதில்லி நோக்கி, விவசாயிகள் பேரணி தொடங்கினா். இவா்கள் ஹரியாணா மாநில எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டு, 11 மாதங்களாக அங்கு கடும் பனி, மழை, வெயிலிலும் போராடி வருகின்றனா்.
இதற்கிடையில் குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் விவசாயக் கடன் தள்ளுபடி ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த நவ. 26 முதல் சம்யுக்த்த கிசான் மோா்சா அமைப்பின் தலைவா் ஜக்ஜீத்சிங் தாலேவாலா உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வருகிறாா்.
இப்போராட்டத்திற்கு ஆதரவாக, குடியரசு தினமான ஜன. 26-ஆம் தேதி அன்று இந்தியா முழுவதும் டிராக்டா் பேரணி நடத்த அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.
இதனை ஏற்று, தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் டிராக்டா் பேரணி நடைபெறும். இதில், ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்கும் வகையில் திட்டமிட்டுள்ளோம் எனத் தெரிவித்துள்ளாா்.