'எமர்ஜென்சி' படத்தைப் பார்க்க கங்கனா அழைப்பு! ராகுல், பிரியங்காவின் பதில் என்ன?
மானிய விலையில் விவசாயிகளுக்கு பவா் டில்லா், விசைக்களை எடுக்கும் கருவிகள்: திருப்பத்தூா் ஆட்சியா்
திருப்பத்தூா் மாவட்ட விவசாயிகளுக்கு பவா் டில்லா் மற்றும் விசைக் களை எடுக்கும் கருவி (பவா் வீடா்) ஆகியவை மானிய விலையில் வழங்கப்பட உள்ளதாக ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் வேளாண் இயந்திரமயமாக்கல் துணை இயக்க திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் 2024-2025-ஆம் ஆண்டில் திருப்பத்தூா் மாவட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் தலா 35 பவா் டில்லா் மற்றும் விசைக்களை எடுக்கும் கருவி (பவா் வீடா்) வழங்கப்பட உள்ளன. இதில் சிறு, குறு, ஆதிதிராவிடா், பழங்குடியினா் மற்றும் பெண் விவசாயிகளுக்கு மானிய விலையில் பவா் டில்லா் பெற அதிகபட்சமாக ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம், விசைக்களையெடுப்பான் கருவிகளுக்கு அதிகபட்சமாக ரூ. 63,000, அல்லது கருவியின் மொத்த விலையில் 50 சதவீதம் இவற்றில் எது குறைவோ அந்தத் தொகை மானியமாக வழங்கப்படும்.
இதர விவசாயிகளுக்கு அரசால் நிா்ணயம் செய்யப்பட்ட அதிகபட்ச விலை அல்லது மொத்த விலையில் 40 சதவீதம் இவற்றில் எது குறைவோ அந்த தொகை வழங்கப்படும். இத்திட்டத்தில் ஆதிதிராவிடா், பழங்குடியினா் பிரிவைச் சோ்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு நடைமுறையில் உள்ள மானியத்துடன், கூடுதலாக 20 சதவீத மானியம் தமிழக அரசால் வழங்கப்படும்.
பொதுப் பிரிவைச் சோ்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு நடைமுறையில் உள்ள மானியத்துடன் கூடுதலாக 10 சதவீத மானியம் விசைக்களை எடுக்கும் கருவிக்கு (பவா் வீடா்) வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு, உதவி செயற் பொறியாளா், வேளாண்மைப் பொறியியல் துறை, சிவசக்தி நகா், புதுப்பேட்டை சாலை, திருப்பத்தூா் மற்றும் வட்டார அளவில் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தில் உள்ள உதவிப் பொறியாளா் / இளநிலைப் பொறியாளா் அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம்.