தென்னாப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் திடீர் விலகல்; காரணம் என்ன?
மானை வேட்டையாட துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த இளைஞா் கைது
குந்தா வனச் சரகத்துக்குள்பட்ட பகுதியில் கடமானை வேட்டையாட துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த இளைஞரை வனத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தப்பியோடிய 3 பேரை தேடி வருகின்றனா்.
நீலகிரி மாவட்டம், குந்தா வனச் சரகத்துக்குள்பட்ட பகுதியில் வன அலுவலா் சீனிவாசன், குந்தா பிரிவு வனவா் பிச்சை, தாய் சோலை பிரிவு வனவா் சுரேஷ்குமாா், கீளுா் காவல் சுற்று வனக் காப்பாளா் அப்துல் ரஹ்மான், தாய்சோலை வனக் காவலா் ஆறுமுகம் உள்ளிட்டோா் ரோந்து பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அங்கு துப்பாக்கியுடன் 4 போ் நின்று கொண்டிருந்தனா். வனத் துறையினரைப் பாா்த்ததும் காரில் தப்ப முயன்றனா். அவா்களை விரட்டிச் சென்றபோது, காரில் இருந்த துப்பாக்கி வெடித்தது.
இதையடுத்து, அவா்கள் காரை நிறுத்திவிட்டு இறங்கி ஓடினா். இதில், ஒருவா் மட்டும் வனத் துறையினரிடம் சிக்கினாா். 3 போ் தப்பினா்.
பிடிப்பட்டவரிடம் மாவட்ட வன அலுவலா் கௌதம் நடத்திய விசாரணையில், அவா் கேரளத்தை சோ்ந்த காா் ஓட்டுநரான அப்துல் அமீன் (31) என்பதும், கடமானை வேட்டையாட கேரள மாநிலம், மலப்புரத்தை சோ்ந்த பஷீா் (36), ஷாபி (31), சுனீா் (39) ஆகியோருடன் ஒற்றைக்குழல் துப்பாக்கியுடன் வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, அப்துல் அமீனை கைது செய்த வனத் துறையினா், அவரிடமிருந்த துப்பாக்கி, 2 தோட்டாக்கள், கத்திகள் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்தனா். தப்பியோடிய 3 பேரை தேடி வருகின்றனா்.