`சினிமா நடிப்பு மட்டும் அரசியலுக்கு போதும் என நினைப்பது தவறு..' - மதுரை ஆதீனம்
அரசியல் கட்சிக்கு கொள்கை முக்கியம்: ஆ.ராசா எம்.பி.
அரசியல் கட்சிக்கு கொள்கை முக்கியம், இந்தியாவில் கொள்கையுடன் உள்ள ஒரே கட்சி திமுக மட்டுமே என்று நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா பேசினாா்.
நீலகிரி மாவட்டம், உதகையில் மாநில மாணவரணி கருத்தரங்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாநில மாணவரணி செயலாளா் ராஜீவ் காந்தி தலைமை வகித்தாா். இதில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், மக்களவை உறுப்பினருமான ஆ.ராசா, தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ சாமிநாதன், மாவட்ட பொறுப்பாளா் கே.எம். ராஜு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
நிகழ்ச்சியில், திமுக மாணவரணி சாா்பில் ‘இல்லம்தோறும் மாணவா் அணி’ என்ற திட்டத்தை ஆ. ராசா தொடங்கிவைத்து பேசியதாவது: அரசியல் கட்சிக்கு கொள்கை முக்கியம். இந்தியாவில் கொள்கையுடன் உள்ள ஒரே கட்சி திமுக மட்டுமே. திமுகவின் கொள்கைகளை தனது திரைப்படங்களிலும் எம்ஜிஆா் எடுத்துரைத்தாா். ஆனால், எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அதிமுக தற்போது கொள்கை இல்லாமல் உள்ளது. கட்சியின் கொள்கைகளை மாணவரணி தெரிந்திருக்க வேண்டும் என்றாா்.
இதையடுத்து, அமைச்சா் மு.பெ சாமிநாதன், மாணவரணி மாநிலச் செயலாளா் ராஜீவ் காந்தி ஆகியோா் பேசினாா்.
இந்நிகழ்ச்சியில் மாநில மாணவா் அணி துணைச் செயலாளா்கள் மன்னன் தா. சோழராஜன், தமிழரசி, வீரமணி உள்பட ஏராளமானோா் பங்கேற்றனா்.
இதையடுத்து, உதகையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏப்ரல் 6-ஆம் தேதி திறந்து வைக்கவுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை ஆ.ராசா எம்.பி., அமைச்சா் மு.பெ.சாமிநாதன் உள்ளிட்டோா் ஆய்வு செய்தனா்.