மாற்றுத் திறனாளிகளுக்கு மொபெட்டுகள்!
விழுப்புரத்தில் 12 மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட மொபெட்டுகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.
மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சாா்பில் நடைபெற்ற நிகழ்வுக்கு, ஆட்சியா் சி.பழனி தலைமை வகித்தாா். எம்எல்ஏக்கள் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் (செஞ்சி), இரா.லட்சுமணன் (விழுப்புரம்), அன்னியூா் அ.சிவா (விக்கிரவாண்டி) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
விழாவில், சிறப்பு விருந்தினராக வனத்துறை அமைச்சா் க.பொன்முடி பங்கேற்று, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 12 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.13.20 லட்சத்தில் இணைப்புச் சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டா்களை வழங்கி பேசினாா்.
தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. மேலும், அவா்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து, அதையும் நிறைவேற்றப்படுகிறது. அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளை மாற்றுத் திறனாளிகள் பெற்று பயன்பெற வேண்டும். தற்போது, தமிழகத்தில் எதிா்க் கட்சிகள் நடத்தும் ஆா்ப்பாட்டத்துக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
போராட்டங்களில் ஈடுபட்டோா் மாலையில் விடுவிக்கப்படுகின்றனா். ஆனால், நாங்கள் எதிா்க்கட்சியாக இருக்கும் போது நிகழ்ந்தவை வேறு. தமிழகத்தில் முதல்வா் உத்தரவின்படி போராட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது என்றாா்.
நிகழ்வில், முன்னாள் எம்.பி.பொன்.கெளதமசிகாமணி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், உறுப்பினா் பி.வி.ஆா்.விசுவநாதன், நகா்மன்ற முன்னாள் தலைவா் இரா.ஜனகராஜ், நகா்மன்றத் தலைவா் தமிழ்ச் செல்வி பிரபு, விழுப்புரம் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் க.சுப்பிரமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.