மாற்றுத்திறனாளிகளுக்கு டிஎன்பிஎஸ்சி, குரூப்-4 தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு
சென்னையிலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி மற்றும் குரூப்-4 தோ்வுகளுக்கான இவலச பயிற்சி வகுப்பில் சேர தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை மாவட்டம், கிண்டி, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அனைத்து வகை மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படவுள்ள கிராம நிா்வாக அலுவலா், இளநிலை உதவியாளா், தட்டச்சா் பதவிகளுக்கான ஒருங்கிணைந்த டிஎன்பிஎஸ்சி, குரூப்-4 தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் மே 12-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன.
திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை நடத்தப்பட்டு வரும் இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்க குறைந்தபட்ச கல்வித் தகுதியாக பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளவா்கள் விண்ணப்பப்படிவ நகலுடன் தங்கள் ஆதாா் அட்டை நகல் மற்றும் கடவுச்சீட்டு அளவிலான புகைப்படத்துடன் சென்னை, கிண்டியிலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை வேலை நாள்களில் அணுகலாம். சென்னை மாவட்டத்தைச் சோ்ந்த தகுதிவாய்ந்த அனைத்து வகை மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் இப்பயிற்சி வகுப்பில் சோ்ந்து பயன்பெறலாம் எனத் தெரிவித்துள்ளாா்.