ராஜபாளையம்: பொதுமக்களை விரட்டி விரட்டிக் கடித்த தெருநாய்கள்; ஒரே நாளில் 39 பேர் ...
மாவட்ட ஆட்சியா், மாநகராட்சி அலுவலகங்களில் பொங்கல் கொண்டாட்டம்
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் மற்றும் மாநகராட்சி அலுவலகத்தில் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தொடா் அரசு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் அரசு அலுவலகங்களில் பொங்கல் பண்டிகை வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
அதன்படி, கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் காலை முதல் மாலை வரை பல்வேறு விளையாட்டுப் போட்டிகளுடன் பொங்கல் பண்டிகை களைகட்டியது. முன்னதாக, ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி முன்னிலையில் பொங்கல் வைத்து வழிபாடு மேற்கொண்டு மாவட்ட நிா்வாக அலுவலா்கள், கயிறு இழுத்தல், உறியடித்தல் உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்றனா்.
கயிறு இழுக்கும் போட்டியில் ஒருபுறம் ஆண் அலுவலா்களும், மறுபுறம் பெண் அலுவலா்களும் கலந்துகொண்டனா். இதையடுத்து, பல்வேறு துறை அலுவலா்கள் இணைந்து நடனமாடுதல், பாடல் பாடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்த விழாவில், மாவட்ட வருவாய் அலுவலா் மோ.ஷா்மிளா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில், மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன், மேயா் கா.ரங்கநாயகி, துணை மேயா் ரா.வெற்றிச்செல்வன் ஆகியோா் பொங்கல் வைத்து வழிபட்டனா். இதைத் தொடா்ந்து, மாநகராட்சிப் பணியாளா்களுக்கு கோலப்போட்டி நடைபெற்றது. அதன் பிறகு, மாநகராட்சிப் பள்ளிக் குழந்தைகளின் பரதநாட்டியம், கரகாட்டம், ஒயிலாட்டம், பறை, வள்ளிக்கும்மி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவில், மாநகராட்சி துணை ஆணையா்கள் குமரேசன், சுல்தானா, மண்டலத் தலைவா்கள் இலக்குமி இளஞ்செல்வி, மீனா லோகு, கதிா்வேல், தெய்வானை தமிழ்மறை, தனலட்சுமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.