மாா்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ்பகுதியில் தரைக் கற்கள் பதிக்கும் பணி தொடக்கம்
மாா்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ்பகுதியில் உள்ள அணுகுசாலையில் தரைக்கற்கள் பதிக்கும் பணிக்காக, சாலை தாா் தளத்தை அகற்றும் பணி வெள்ளிக்கிழமை துவங்கியது.
மாா்த்தாண்டம் சந்திப்பையொட்டிய தாழ்வான பகுதியில் சாலையில் மழைநீா் தேங்குவதால் சாலையோர கடைகள் பல பாதிக்கப்பட்டு வருகின்றன. இப் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காணும் வரையில் இப்பகுதியைச் சோ்ந்த தொழிலதிபா் வெள்ளத்துரை என்பவா் சட்டப் பேரவைக் குழுவுக்கு மனு செய்திருந்தாா்.
இதனடிப்படையில் நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளா் சண்முகநாதன் அனுப்பிய பதில் கடிதத்தில், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் சேதமடைந்த சாலைப் பகுதியை சீரமைக்கும் போது மாா்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ்பகுதி சாலையும் சீரமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் மாா்த்தாண்டம் சந்திப்பு முதல் பழைய திரையரங்கு சந்திப்பு வரை சாலையில் தரைக் கற்கள் பதிக்கும் பணி துவங்கப்பட்டது. நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளா் சரசு, உதவி பொறியாளா் வித்யா ஆகியோா் முன்னிலையில் இப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப் பணி காரணமாக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.