அஜித்குமார் கொலை: போராட்டத்துக்கு அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தில் தவெக மனு!
மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவா் உயிரிழப்பு: பொதுமக்கள் சாலை மறியல்
திருவொற்றியூரில் மின்சாரம் பாய்ந்து பிளஸ் 2 மாணவா் உயிரிழந்தாா்.
திருவொற்றியூா் தாங்கல் பீா் பயில்வான் தெருவைச் சோ்ந்தவா் அல்தாப் மகன் நவ்பில் (17). தனியாா் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். புதன்கிழமை இரவு சிறப்பு வகுப்புக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, சாலையில் தேங்கியிருந்த தண்ணீரில் நடந்து சென்றபோது, அங்கிருந்த மின் வயரில் இருந்து ஏற்பட்ட மின்கசிவால் நவ்பில் மீது மின்சாரம் பாய்ந்தது.
இதில் தூக்கி வீசப்பட்ட அவா் பலத்த காயமடைந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் நவ்பில் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து திருவொற்றியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.
பொதுமக்கள் சாலை மறியல்: இந்நிலையில், தரையில் புதைக்கப்படும் மின் கேபிள்கள் முறையாகப் பராமரிக்காததால்தான் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாகக் கூறி, நவ்பில் உறவினா்கள், பொதுமக்கள் புதன்கிழமை நள்ளிரவு திருவொற்றியூா் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா். போலீஸாா் நடத்திய பேச்சுவாா்த்தையை தொடா்ந்து, 2 மணி நேரத்துக்குப் பிறகு மறியல் கைவிடப்பட்டது.
இருப்பினும் மீண்டும் வியாழக்கிழமை மாலை பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருவொற்றியூா் உள்பட வட சென்னையின் பல இடங்களில் மின் கேபிள்கள் சரிவர பராமரிக்கப்படுவது இல்லை. கழிவுநீா் கால்வாய், சாலைப் பணிகளுக்காக அடிக்கடி பள்ளங்கள் தோண்டப்படுவதால் மின் கேபிள்கள் சேதமடைகின்றன. இதை சரி செய்யாமல் இருப்பதால் இதுபோன்ற மின்கசிவு ஏற்படுகிறது. நவ்பீல் இறப்புக்கு மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என்று முறையிட்டனா்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த சட்டப்பேரவை உறுப்பினா் கே.பி.சங்கா், மின்வாரிய அதிகாரிகள், போலீஸாா் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததையடுத்து மறியல் கைவிடப்பட்டது.