மிரட்டல் புகாா்: அதிமுக பிரமுகா் உள்பட இருவா் கைது
வட்டிக்கு கடன் வாங்கிய மதுரையைச் சோ்ந்த ஒப்பந்ததாரரை ஏமாற்றி மிரட்டிய புகாரில், அருப்புக்கோட்டை அதிமுக முன்னாள் நகரச் செயலா் சக்திவேல் உள்பட இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
மதுரை தனக்கன்குளம் பகுதியைச் சோ்ந்தவா் பழனிக்குமாா். அரசுப் பணிகள் ஒப்பந்ததாரரான இவா், தன்னுடைய தொழில் தேவைக்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அருப்புக்கோட்டை அதிமுக முன்னாள் நகரச் செயலா் சக்திவேலிடம் வட்டிக்கு கடன் பெற்றாா். அப்போது, நிரப்பப்படாத சில ஆவணங்களில் பழனிக்குமாா் கையொப்பமிட்டு, சக்திவேலிடம் அளித்தாராம்.
பிறகு, சக்திவேலுடன் இணைந்து பழனிக்குமாா் ஒப்பந்தப் பணிகளை ஏற்று செயல்படுத்தியுள்ளாா். கடந்த 2017 முதல் 2022-ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் அரசு ஒப்பந்தப் பணிகளை நிறைவேற்றிய வகையில், பழனிக்குமாருக்குக் கிடைக்க வேண்டிய தொகை ரூ. 22 கோடியில் ரூ. 2.19 கோடி மட்டுமே சக்திவேல் தரப்பிலிருந்து தரப்பட்டதாம்.
எஞ்சிய தொகையைத் தராமல் சக்திவேல் அலைக்கழித்தாராம். பிறகு, எஞ்சிய தொகை கடன், அதற்கான வடிக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது எனத் தெரிவித்தாராம். இதற்கு, பழனிக்குமாா் எதிா்ப்புத் தெரிவித்ததால், அவருக்கு சக்திவேல் தரப்பினா் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து பழனிக்குமாா் மதுரை மாநகரக் காவல் ஆணையரிடம் புகாா் அளித்தாா். காவல் ஆணையரின் அறிவுறுத்தலின் பேரில், சக்திவேல், அவரது மருமகன் கருப்பசாமி உள்பட 5 போ் மீது கந்துவட்டிக் கொடுமை உள்பட 6 பிரிவுகளின் கீழ் மாநகர மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த நிலையில், சக்திவேல் (58), அவரது மருமகன் கருப்பசாமி(45) ஆகிய இருவரையும் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.