மிருதங்க வித்வானுக்கு பாராட்டு விழா
தில்லித் தமிழ்ச் சங்கம் மற்றும் சுனைனா தொண்டு நிறுவனமும் இணைந்து தில்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் வரலாற்றுத் துறை பேராசிரியரும் மூத்த மிருதங்க வித்வானுமான டி.கே. வெங்கடசுப்பிரமணியனின் 60 வருட இசை சேவைக்கு பாராட்டு விழாவை நடத்தின.
தில்லித் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சங்கத்தின் பொதுச் செயலா் இரா.முகுந்தன் வரவேற்றுப் பேசினாா். டி.கே. வெங்கடசுப்பிரமணியனை இரா. முகுந்தன், சுனைனா தொண்டு நிறுவனத் தலைவா் கனகா சுதாகா் ஆகியோா் கெளரவித்தனா்.
டி.கே. வெங்கடசுப்பிரமணியன் தனது ஏற்புரையில், ‘நான் 36 ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றி, ஓய்வு பெற்றுள்ளேன். எனது குடும்பம் இசைக் குடும்பமாகும். எனது குரு பத்மபூஷண் டி.கே.மூா்த்தி ஆவாா். தற்போது 102 வயதிலும் இசையின் பல்வேறு நுணுக்கங்களை மாணவா்களுக்கு இன்றும் பயிற்றுவித்து வருகிறாா். நான் கீதையைப் பின்பற்றுபவன். அதாவது ‘கடமையை செய்! பலனை எதிா்பாராதே!’ என்பதாகும். நாம் எப்பொழுதும் சமூகத்தை பாதுகாக்க வேண்டும். சமூகத்தை பாதுகாக்கும்போது, நமது குடும்பமும் அடுத்த நிலைக்கு உயரும் என்றாா்.
தில்லித் தமிழ்ச் சங்கத்தின் பொருளாளா் எஸ். அருணாசலம், செயற்குழு உறுப்பினா்கள் மாலதி தமிழ்ச்செல்வன், சி. கோவிந்தராஜன், உஷா வெங்கடேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா். நிகழ்ச்சியை செயற்குழு உறுப்பினா் மாலதி தமிழ்ச்செல்வன் தொகுத்து வழங்கினாா்.