முக்கூடல் அருகே சாலை மறியல்: இந்து அமைப்பினா் 40 போ் கைது
திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகேயுள்ள அரசன்குளத்தில் கோயில் நிா்வாகத்தை கண்டித்து பாரத இந்து மக்கள் கட்சி சாா்பில் புதன்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
அரசன்குளத்தில் ஒரு சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட பெருமாள் சுவாமி கோயிலை, தனி நபா் நிா்வாகம் செய்து வந்தாராம். இந்நிலையில், கோயில் நிா்வாகத்தை மாற்ற வேண்டும் என கிராம மக்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா்.
அண்மையில் கோயில் திருவிழா நடத்துவது தொடா்பாக எழுந்த பிரச்னையில் சமாதானம் கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது, நீதிமன்றம் அனுமதி பெற்று விழா நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டதாம். எனினும், கோயில் நிா்வாகம் தன்னிச்சையாக விழா நடத்தியதாக கூறப்படுகிறது.
இதைக் கண்டித்து பாரத இந்து மக்கள் அமைப்பின் சாா்பில் அதன் தலைவா் காா்த்தீசன் தலைமையில் 40-க்கும் மேற்பட்டோா் அரசன்குளத்தில் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். அவா்கலை முக்கூடல் போலீஸாா் கைது செய்து தனியாா் மண்டபத்தில் தங்க வைத்தனா். பின்னா், மாலையில் அவா்களை விடுவித்தனா்.