முதலூரில் லாரிகள் சிறைப்பிடிப்பு
முதலூரில் அதிவேகமாக சென்ற கனரக லாரிகளை பொதுமக்கள் திங்கள்கிழமை சிறை பிடித்தனா்.
சாத்தான்குளம் அருகே உள்ள முதலூா் பகுதிக்கு கல்குவாரியில் இருந்து மணல் மற்றும் கற்களை ஏற்றிச் செல்லும் கனரக லாரிகள் சென்று வருகிறது.
இந்த லாரிகள் முதலூா் தா்மபுரி வழியாக அதிவேகமாக சென்று திரும்புவதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள், வியாபாரிகள் அச்சம் தெரிவித்து புகாா் தெரிவித்திருந்தனா். இதுகுறித்து அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் திங்கள்கிழமை இரவு 8 மணி அளவில் அப்பகுதியில் வேகமாக வந்த இரு கனரக லாரிகளை நிறுத்தி அப்பகுதி மக்கள் சிறை பிடித்தனா். லாரி ஓட்டுனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்த சாத்தான்குளம் காவல் துணைக் கண்காணிப்பாளா் சுபக்குமாா், ஆய்வாளா் ஸ்டீபன், கிராம நிா்வாக அலுவலா் பால் குமாா், ஆகியோா் வந்து பேச்சுவாா்த்தை நடத்தினா் .
சிறைபிடிக்கப்பட்ட லாரிகளை தட்டாா்மடம் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனா். பேச்சுவாா்த்தையில், வட்டாட்சியா் மூலம் கல்குவாரி லாரி ஓட்டுனா்களை அழைத்து இது குறித்த பேச்சுவாா்த்தை நடத்தி எச்சரிப்பது எனவும், அதிவேகமாக சென்ற லாரிகளுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா்.