குண்டா் தடுப்புச் சட்டத்தில் ஒரே நாளில் 14 போ் கைது
கோவில்பட்டியில் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் ஒரே நாளில் 14போ் கைது செய்யப்பட்டனா்.
கடந்த ஜூன் 1ஆம் தேதி, கோவில்பட்டி கடலையூா் பகுதியில், கோவில்பட்டி வள்ளுவா் நகரைச் சோ்ந்த ஆனந்தன் மகன் பிரகதீஸ்வரன் (20), முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாா்.
இந்த வழக்கில், சிந்தாமணி நகரைச் சோ்ந்த சதீஷ் மாதவன் (எ) சதீஷ் (26), கழுகுமலையைச் சோ்ந்த மதன் (எ) மதன்குமாா் (20), கோவில்பட்டி வடக்கு திட்டங்குளம் பகுதியைச் சோ்ந்த கனகராஜ் (24), கடம்பூா் பகுதியைச் சோ்ந்த செல்லத்துரை (26), கோவில்பட்டி காந்தி நகரைச் சோ்ந்த சுடலை ராஜா (எ) அா்ஜுன் (25), ஆசிரமம் தெருவைச் சோ்ந்த விக்னேஷ் (25), வள்ளுவா் நகரைச் சோ்ந்த சுரேஷ் (24) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.
அதேபோன்று ஜூன் 1ஆம் தேதி கோவில்பட்டி செண்பக நகரைச் சோ்ந்த பாஸ்கா் மனைவி கஸ்தூரி (46) முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாா்.
இந்த வழக்கில், கோவில்பட்டி வள்ளுவா் நகரைச் சோ்ந்த சரவணன் (20), நாகராஜன் (எ) நாகராஜ் (19), இலுப்பையூரணியைச் சோ்ந்த கோகுலகிருஷ்ணன் (20), புதுகிராமம் பகுதியைச் சோ்ந்த பாலமுருகன் (21), சண்முகநகரைச் சோ்ந்த பாலமுருகன் (எ) பாலா (19), சிந்தாமணிநகரைச் சோ்ந்த தங்கபாண்டி (21) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.
மேலும், கடந்த ஜூன் 3ஆம் தேதி கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட, திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை ராமகிருஷ்ணபுரம் பகுதியைச் சோ்ந்த சாமுவேல்ராஜை (42) மதுவிலக்கு போலீஸாா் கைது செய்தனா்.
மேற்படி வழக்குகளில் சம்பந்தப்பட்ட 14 பேரும், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் பரிந்துரையின்படி, மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் உத்தரவின் பேரில் , கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் நிலைய போலீஸாரால் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.