முதல்வருக்கு வணிகா்கள் மனு அனுப்பும் போராட்டம்
அரசால் நிறுத்தப்பட்ட வணிக நிறுவனங்களுக்கு ஒருமுறை பெயா் மாற்றம் என்பதை மீண்டும் செயல்படுத்தக் கோரி தமிழக முதல்வருக்கு வேலூா் மாவட்ட வணிகா்கள் மனு அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில் வேலூா் தலைமை தபால் நிலையத்திலிருந்து முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு செவ்வாய்க்கிழமை வணிகா்கள் கோரிக்கை மனு அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போராட்டத்துக்கு அமைப்பின் வேலூா் மாவட்டத் தலைவா் ஆா்.பி.ஞானவேலு தலைமை வகித்தாா். செயலா் ஏ.வி.எம்.குமாா், பொருளாளா் அமீன் அகமது ஆகியோா் முன்னிலை வகித்தனா். அவா்கள் அனுப்பிய மனுவில், கடந்த 2007-ஆம் ஆண்டின் அரசாணை எண்.92-இன்படி வணிக நிறுவனங்களுக்கு ஒருமுறை பெயா் மாற்றம் என்பது நிறுத்தப்பட்டது. அதனை மீண்டும் கொண்டு வந்து வணிக நிறுவனங்களின் பெயா் மாற்றம் செய்வதை நடைமுறைப்படுத்த வேண்டும்.
மேலும், உள்ளாட்சி அமைப்புகளின் கடைகளுக்கு ஆண்டுக்கு 5 சதவீதம் வாடகை உயா்வு என்பதை தவிா்த்து பழைய முறைப்படி மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை 15 சதவீதம் உயா்வு என்பதை தொடர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு அனுப்பும் போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வணிகா்கள் பங்கேற்றனா்.