தமுஎகச 2024-ஆம் ஆண்டிற்கான கலை இலக்கிய விருதுகள்! - யார் யாருக்கு என்னென்ன விருத...
முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே...! 'பச்சைத் துண்டு' போதாது... கள யதார்த்தத்தை உணரவேண்டும்!
அனைவருக்கும் பசுமை வணக்கம்
“1 குவிண்டால் நெல்லுக்கு ஊக்கத்தொகையாக சன்னரக நெல்லுக்கு 156 ரூபாயும், சாதாரண நெல்லுக்கு 131 ரூபாயும் உயர்த்தி வழங்கியிருக்கிறோம். இதை மிகவும் பெருமையாக உணர்கிறேன். தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையில் சொன்னபடி, ‘ஒரு குவிண்டால் நெல்லுக்கு 2,500 ரூபாய்’ என்கிற வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டோம்” என்று புளகாங்கிதப்பட்டிருக்கிறார் தமிழ்நாட்டு அரசின் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி.
தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் சராசரியாக 80 லட்சம் டன் அளவுக்கு நெல் உற்பத்தி செய்யப்படுகிறது. நடப்பு ஆண்டுக்கான நெல் கொள்முதல் செப்டம்பர் 2-ம் தேதி தொடங்கியிருக்கிறது. தமிழ்நாடு அரசின் இந்த ஊக்கத்தொகை உயர்வு மூலம் 1 குவிண்டால் சன்னரக நெல்லுக்கு 2,545 ரூபாயும், சாதாரண நெல்லுக்கு 2,500 ரூபாயும் விவசாயிகளுக்குக் கிடைக்கும்.
‘‘இந்த நெல் கொள்முதல் விலை உயர்வு விவசாயிகளுக்கு எந்தவிதத்திலும் பலன் அளிக்காது. இதில் லாபமே இல்லை’’ என்கிறார், ‘காவிரி உழவர்கள் பாதுகாப்புச் சங்க’ செயலாளர் சுவாமிமலை சுந்தர விமல்நாதன்.
ஆம்... அவர் போட்டுச் சொல்லும் கணக்கை நீங்களும் கூட்டிக் கழித்துப் போட்டுப் பாருங்கள்... ‘உழுதவன் கணக்குப் பார்த்தால், உழக்குக்கூட மிஞ்சாது’ என்பது உங்களுக்கும் புரியும்.
‘‘ஏக்கருக்கு சராசரியாக 30 மூட்டை (1 மூட்டை 60 கிலோ) விளைகிறது. இதன்மூலம் 18 குவிண்டால் கிடைக்கும். 1 குவிண்டாலுக்கு சராசரியாக 2,500 ரூபாய் என்றால், 18 குவிண்டாலுக்கு 45,000 ரூபாய் வருமானம்.
உழவு, விதை, களை, அறுவடை, உரம், பூச்சி மருந்து என்று 1 ஏக்கரில் நெல் சாகுபடி செய்ய அரசின் கணக்குப்படியே 37,600 ரூபாய் செலவாகிறது. செலவு போக 7,400 ரூபாய் கிடைக்கும். இதில் கொள்முதல் நிலையத்துக்கு மூட்டைகளைக் கொண்டு செல்வதற்கான போக்குவரத்து செலவு, கொள்முதல் நிலைய ஊழியர்களுக்கு 1 மூட்டைக்கு 50 ரூபாய் லஞ்சம். கடைசியில் கையில் 5,000 ரூபாய் நின்றால், அதுவே பெரிய விஷயம். ஒவ்வொரு போகத்துக்கும் 3, 4 மாதங்கள் பாடுபட்டு உழைத்த விவசாயிக்கான கூலியையும் சேர்த்தால், உழக்குக்கூட மிஞ்சாது. குவிண்டாலுக்கு 3,500 ரூபாய் கொடுத்தால் மட்டுமே ஓரளவுக்கு கட்டுப்படியாகும்’’ என்பதுதான் எங்களின் எதிர்பார்ப்பு என்கிறார் சுந்தர விமல்நாதன், விவசாயிகளின் பிரதிநிதியாக.
வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருக்கிறது என்பதால்தான், உங்கள் கட்சியைச் சேர்ந்த விவசாய சங்கங்களுமேகூட, ‘வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டோம்’ என்றபடி நீங்கள் அறிவித்திருக்கும் ‘2,500 ரூபாய்’ விலை உயர்வால் துளிகூட மகிழ்ச்சி அடையவில்லை.
‘நானும் காவிரி டெல்டாக்காரன்தான்’ என்று பெருமையோடு பச்சைத் துண்டு போட்டுக்கொண்டு பேசினால் மட்டும் போதாது... கள யதார்த்தம் அப்படியில்லை என்பதை உணர வேண்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே!
- ஆசிரியர்