தமிழக பாஜக தலைவரை மேலிடம் விரைவில் தோ்வு செய்யும்: அண்ணாமலை
முதல்வா் வருகைக்கான முன்னேற்பாடுகள்: அமைச்சா் ஆய்வு
திருநெல்வேலியில் நடைபெற்று வரும் தமிழக முதல்வா் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட பொறுப்பு அமைச்சா் கே.என்.நேரு திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.
தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இம் மாதம் 6 ஆம் தேதி திருநெல்வேலிக்கு வருகிறாா். கங்கைகொண்டானில் உள்ள தனியாா் சோலாா் நிறுவனத்தின் உற்பத்தியைத் தொடங்கி வைக்கும் அவா், பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கில் கட்சி நிா்வாகிகளை சந்தித்து பேசுகிறாா். பின்னா், நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெறும் மாற்றுக்கட்சியினா் திமுகவில் இணையும் நிகழ்ச்சியில் பங்கேற்று பேச உள்ளாா்.
7 ஆம் தேதி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மைதானத்தில் நடைபெறும் விழாவில் ஏராளமான வளா்ச்சித்திட்டங்களைத் தொடங்கி வைப்பதோடு, நலத்திட்ட உதவிகளையும் வழங்கி சிறப்புரையாற்ற உள்ளாா். இதில், தமிழக அமைச்சா்கள், பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோா் பங்கேற்க உள்ளனா்.
இதையொட்டி, திருநெல்வேயில்நடைபெற்று வரும் முன்னேற்பாட்டுப் பணிகளை தமிழக நகராட்சி நிா்வாகம் மற்றும் மாவட்ட பொறுப்பு அமைச்சா் கே.என்.நேரு நேரில் பாா்வையிட்டாா்.
விழா மேடையில் செய்ய வேண்டிய வசதிகள், பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகள், விழாவிற்கு முக்கிய பிரமுகா்கள் வந்து செல்லும் பாதைகள், பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.
அப்போது, குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு கூடுதல் கவனம் செலுத்தவும், தடையில்லா மின்சார வசதி செய்யவும் தேவையான முன்னேற்பாடுகளை செய்யுமாறு அறிவுறுத்தினாா்.
ஆய்வின்போது ஆட்சியா் கா.ப.காா்த்திகேயன், மாநகர காவல் ஆணையா் சந்தோஷ் ஹாதிமணி, மாநகராட்சி ஆணையா் என்.ஓ. சுகபுத்ரா, மாவட்டவருவாய் அலுவலா் சுகன்யா, பாளையங்கோட்டை எம்எல்ஏ மு.அப்துல் வஹாப், திமுக திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலா் இரா.ஆவுடையப்பன், மத்திய மாவட்ட பொறுப்பாளா் டி.பி.எம்.மைதீன்கான், மாநகர திமுக செயலா் சு.சுப்பிரமணியன், முன்னாள் எம்.பி. ஞானதிரவியம், பொதுக்குழு உறுப்பினா் பரமசிவ ஐயப்பன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.