களக்காடு மலையடிவாரத்தில் யானைகள் நடமாட்டம்: விவசாயிகள் அச்சம்
களக்காடு மலையடிவாரத்தில் யானைகள் நடமாட்டம் காரணமாக விவசாயிகள் அச்சமடைந்துள்ளனா்.
களக்காடு மலையடிவாரத்தில் கடந்த சில மாதங்களாக காட்டு யானைகளால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக சிதம்பரபுரம் கிராம விவசாயிகளின் தோட்டங்களில் காட்டுயானைகள் கூட்டமாகப் புகுந்து வாழையை சேதப்படுத்தின.
கடந்த 2 வாரமாக யானைகள் நடமாட்டம் ஓய்ந்திருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மீண்டும் அப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏத்தன் ரக வாழைகளை யானைகள் சேதப்படுத்தியுள்ளன. இதனால் விவசாயிகளிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
தற்போது வாழைகள் அறுவடை நிலையை எட்டியுள்ள நிலையில் யானைகளின் அட்டகாசத்தால் பெரும் இழப்பு ஏற்படும்; யானைகளை அடா்ந்த காட்டுப் பகுதிக்குள் விரட்ட வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.