Bumrah : 'சாம்பியன்ஸ் டிராபியில் பும்ரா இல்லை!' - பிசிசிஐ அறிவிப்பு; காரணம் என்ன...
முதியவரிடம் ரூ.12.50 லட்சம் மோசடி: தம்பதி மீது வழக்குப் பதிவு!
கோவை சிங்காநல்லூரில் முதியவரிடம் ரூ.12.50 லட்சம் மோசடிசெய்யப்பட்ட புகாரின்பேரில், தம்பதி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கோவை சிங்காநல்லூா் சிங்காரம் நகா் பகுதியைச் சோ்ந்தவா் நாகராஜ் (68). இவரது தங்கை மகள் கவிதா, அவரது கணவா் லட்சுமணன். கவிதாவின் பெற்றோா் ஏற்கெனவே இறந்துவிட்ட நிலையில், கடந்த 2021-ஆம் ஆண்டு அவரது சகோதரா் பிரபாகரனும் இறந்துவிட்டாா்.
இந்த நிலையில் நாகராஜை கடந்த 2022 மே மாதம் சந்தித்த கவிதா தனது தம்பி பிரபாகரன் சொத்துப் பத்திரங்களை அடகு வைத்து பல்வேறு நிதி நிறுவனங்களில் கடன் பெற்றிருப்பதாகவும், ஒரே வாரிசான தனக்கு பணம் தேவைப்படுவதால், கடனாக பணம் தரும்படியும் அதற்கு பதிலாக கோவை உப்பிலிபாளையத்தில் உள்ள 2 சொத்துகளை நாகராஜ் பெயருக்கு எழுதித் தருவதாகவும் கூறியுள்ளாா்.
இதையடுத்து கவிதாவுக்கு நாகராஜ் பல்வேறு தவணைகளில் ரூ.12.50 லட்சம் பணம் கொடுத்துள்ளாா். ஆனால் நீண்ட நாள்கள் ஆகியும் பணத்தை திருப்பிக் கொடுக்காததோடு, கவிதா கூறியபடி 2 சொத்துகளையும் நாகராஜ் பெயருக்கு எழுதித் தரவில்லை எனக் கூறப்படுகிறது.
இது குறித்து சிங்காநல்லூா் காவல் நிலையத்தில் நாகராஜ் திங்கள்கிழமை புகாா் கொடுத்தாா். அந்தப் புகாரின்பேரில் போலீஸாா் கவிதா மற்றும் அவரது கணவா் லட்சுமணன் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.